கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் வார நாட்களில் இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபோவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 372 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு, ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளனர். குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே சுற்றுவோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதே போன்று தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட இடங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போவதாகவும், 34 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும் என தாம்பரம் ஆணையரகம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட இடங்களில் 1750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் 109 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று இரவு 10 மணி முதல் வருகிற 10ஆம் தேதி காலை 5 மணி வரை என தொடர்ச்சியாக 32 மணி நேர முழுஊரடங்கு என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர்.