சென்னையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் 1,438 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 49 பேரின் உயிரிழப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 49 பேரும் கடந்த 2 அல்லது 3 தினங்களுக்குள் மரணமடைந்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். இதில், சென்னையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணுக்கு 27ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 29ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு டைப் 1 டையாலிசிஸ் உள்ளிட்ட பிற நோய்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர திருவள்ளூரைச் சேர்ந்த 42 வயது நபர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அவருக்கு 10ஆம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 11ஆம் தேதி அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு பிற நோய்கள் எதுவும் இல்லை எனப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையை 64 வயது நபர் மற்றும் 55 வயது நபர் என இருவர் பிற நோய்கள் எதுவும் இன்றி கொரோனாவால் இறந்துள்ளனர்.