திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வால் பொதுமக்கள் ஓரளவிற்கு சகஜ நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.
.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 15ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் 185 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டனர். ஆனால் தற்போது சென்னை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொதுமக்கள் வருகை வந்ததன் காரணமாக கடந்த 25 தினங்களில் மட்டும் 554 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 410 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றில் 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.