நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இதில், ஜோக்கர் படம் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது போன்றவற்றைப் பெற்றது.
இப்படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் ‘ஜிப்ஸி’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் பரபரப்பாகக் கவனிக்கப்பட்டது.
இதன் ஒரு பாடல் காட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட சிலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, இந்தப் படம் தணிக்கைக்குச் சென்றது.
ஆனால், படத்தை பார்த்த தணிக்கை குழு, சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டது. இதனால் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்ப்பாயத்துக்கு படம் அனுப்பப்பட்டது. இறுதியில் தணிக்கைக்குத் தகுந்தாற் போல் சில காட்சிகளை நீக்கி, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அப்போது நடிகை கவுதமி தலைமையிலான தீர்ப்பாயக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியது.
'ஜிப்ஸி' தணிக்கை செய்யப்பட்டாலும், படம் வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜனவரி 24-ம் தேதி 'ஜிப்ஸி' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் 'ஜிப்ஸி' மார்ச் 6-ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் ராஜுமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.