எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், தற்போது படத்தின் டீசர், ட்ரெய்லர், பாட்டுகள் என அனைத்துமே யூடியூப் பார்வைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன.
முன்பெல்லாம் வெறும் ஒப்பீட்டு அளவில் மட்டுமே இருந்த யூடியூப் பார்வைகளின் எண்ணிக்கையானது, தற்போது டார்கெட் என்ற நோக்கத்திற்காகவும், எங்கள் வீடியோ எந்தளவு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் கவனிக்கப்படுகின்றன.
அதனால் தான் ஒவ்வொரு சினிமா இண்டஸ்டிரியிலும் எங்கள் ஹீரோவின் ட்ரெய்லர் வியூஸ் இத்தனை மில்லியன் வீயூஸ், எங்கள் ஹீரோவின் பாடல் இத்தனை லட்சம் வியூஸ் என ரசிகர்கள் புதிய டிரெண்டிங்கை தொடங்கிவைத்துள்ளனர்.
ரசிகர்களின் பல்ஸை பிடித்து அப்படியே பின்பற்றும் சில கம்பெனிகள் நம்பர்ஸ் என்ற விளையாட்டை பணத்தை கொண்டு விளையாடிவருகின்றன. அதற்கு சான்றாக வசூலின் விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் 300 கோடி, 500 கோடி வசூல் என்றும், பாடல் வெளியான சிறிதுநேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ் என்றும் கணக்கு காட்டப்படுகின்றன. இயக்குநர் எச்.வினோத் சொன்ன கருத்தை கூட இந்த இடத்தில் பொருத்தி பார்க்கலாம்.
இந்த நம்பர் விளையாட்டுக்கள் எதன் அடிப்படையில், எப்படி நடத்தப்படுகின்றன என்பது குறித்து ஓப்பனாக உடைத்து பேசியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் உடனான உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் யுவன் சங்கர் ராஜா, ஒரு பாடலின் தரமானது தற்போது யூடியூப் வியூஸ்களின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதாகவும், அவற்றை சிலர் பணத்தை கொண்டு மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் வெளிப்படுத்தினார்.
யூடியூப் வியூஸ் குறித்து பேசிய அவர், “முன்பெல்லாம் ஒரு ஆல்பம் ரிலீஸாகிறது என்றால் பாடல்கள் ரேடியோவில் அதிகமாக ஒலிபரப்பப்படும், டீக்கடைகளில் நம்ம பாட்டு ஓடுவதை கேட்டால் இந்த பாட்டு ஹிட்டுனு நினைப்போம். ஆனால் இப்போதெல்லாம் யூடியூப் வியூஸ் மற்றும் ரீல்ஸ் எண்ணிக்கையை வைத்துதான் ஒரு பாடல் ஹிட்டா இல்லையானு சொல்றாங்க.
பணம் கொடுத்தா யூடியூப்ல ஈசியா 10 மில்லியன் வியூவ்ஸ் வாங்கலாம், அதே மாதிரி அந்த பாட்டுக்கு திட்டமிட்டு இன்ஃப்ளூயன்சர்களிடம் பணம்கொடுத்து ரீல்ஸ் பண்ண வைக்குறாங்க. அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பாடல்களுக்கு ரீல்ஸ் செய்றாங்க, அவர்கள் மூலம் அது அப்படியே ஸ்ட்ரீமிங் தளங்களில் பரப்பப்பட்டு பணம் சம்பாதிக்குறாங்க. இதுல என்ன ஹிட் இருக்கு?
இது எல்லா பாட்டுக்கும் நடக்குதுனு சொல்லல, ஆனா சில பேரு இப்படியும் பன்றாங்க. தற்போது இருக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒரு கலைப்படைப்பானது தரத்தை வைத்து ஒப்பிடப்படாமல், பணத்தின் மூலம் வெறும் வியூஸ்களின் வழியாகவே ஒப்பிடப்படுகிறது” என்று யூடியூப் வியூஸ் நம்பர் ஸ்ட்ரீமிங் ஸ்கேம் குறித்து யுவன் சங்கர் ராஜா ஓபனாக பேசியுள்ளார்.