யுவனின் பின்னணி இசையைப் பொறுத்தவரை காதல் கொண்டேன் திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த திரைப்படத்தின் மொத்த ஆன்மாவையும் யுவனின் இசை தாங்கி நிற்கும்.
தளபதி படத்தில் ரஜினியிடம் தன்னுடைய திருமண செய்தியை ஷோபனா சொல்லும் அந்த காட்சி இன்றளவும் பேசப்பட்டு வரும் கிளாசிக் காட்சி. கிட்டதட்ட 3 நிமிடங்கள் அந்த காட்சி இருக்கும். ஷோபனா ரஜினியிடம் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகரும் வரை பின்னணியில் ஒரே அமைதியாக இருக்கும். சிட்டுக்குருவியின் சத்தம் மட்டும் இடையிடையே கேட்டுக் கொண்டிருக்கும். ஷோபனா அந்த இடத்தை விட்டு நகரும் போது, தன்னுடைய காதல் கைவிட்டு போன சோகத்தில் ரஜினி சோகத்துடன் திரும்பி பார்ப்பார். அந்த இடத்தில் துவங்கும் இளையராஜாவின் ராஜாங்கம். அதே போன்று சூரியன் அஸ்தமிக்கும் காட்சியையும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சேர்த்திருப்பார்.
இந்தக் காட்சிக்கும் ராஜாவின் இசைக்கும் அர்த்தங்கள் ஏராளம். அந்த புல்லாங்குழலும் வயலினும் சங்கமிக்கும் இசைக் கோர்வையில், அப்படியே நம்முடைய மனமெல்லாம் உடைந்து போகும். அதேபோல், திருமணத்துக்கு பின்னர் அரவிந்த்சுவாமி வீட்டிற்கு ரஜினி செல்லும் போது, வீட்டின் முன் உள்ளே படிக்கட்டில் ஷோபனாவும் அவரும் நேருக்கு நேர் சந்திப்பார்கள். அப்போது, சோகத்தை இதயத்தில் இருந்து பிழிந்து கொடுக்கும் அந்த மகத்துவமான இசையை நமக்கு வழங்கி இருப்பார் ராஜா.
ஒரு திரைப்படத்திற்கு பாடல்களை தாண்டி பின்னணி இசை எப்படி உயிர் கொடுக்கும் என்பதற்கு மேலே சொன்ன காட்சி ஒரு அற்புதமான உதாரணம். 2 மணி நேரத்திற்கு மேல் ஓடும் ஒரு படத்தினை தாங்கி நிற்பது பின்னணி இசைதான். மகிழ்ச்சி, துயரம் என படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதில் பின்னணி இசையின் பங்களிப்பு அசாத்தியமானது. எவ்வளவுதான் இயக்குநர் அந்த காட்சியை வடிவமைத்திருந்தாலும் அந்த காட்சியை பூர்த்தி செய்வது பின்னணி இசைதான்.
ஆம். இளையராஜாவிடம் இருந்து யுவன் சங்கர் ராஜா சரியாக கற்றுக் கொண்டதில் இந்த பின்னணி இசைதான் மிகவும் முக்கியமானது என்றே சொல்லலாம். இளையராஜாவின் உச்சத்தை யுவன் தொட்டுவிட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால், தமிழ் சினிமாவில் இன்றளவும் பின்னணி இசைக்கான முயற்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நபராக அவர் திகழ்கிறார். பெரிய இயக்குநர், பெரிய பட்ஜெட் என பாராமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பின்னணி இசைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் சிறப்பான ஒன்று. உதாரணத்திற்கு சிறிய பட்ஜெட் படம் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் அறிந்தும் அறியாமலும் படத்தில், பிரகாஷ்ராஜ், ஆர்யா, நவ்தீவ் மூவர் இடையே வரும் பாசக் காட்சிகளை பார்த்தால் தெரியும்.
யுவனின் பின்னணி இசையைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் நிறைய உண்டு. அவ்வளவு செய்து முடித்திருக்கிறார். யுவனின் பின்னணி இசையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மேலே நாம் குறிப்பிட்ட தளபதி படத்தில் வருவதுபோல் ஒரு காட்சி அதற்கு உயிரோட்டம் கொடுக்கும் இசை என இரண்டையும் இணைத்து பார்க்க வேண்டும். யுவனின் பின்னணி இசையில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ராம் உள்ளிட்ட படங்கள் மாஸ்டர் பீஸ். இதில் ஒரே ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் அவர் செய்துள்ள பின்னணி இசையின் மேஜிக்கை பார்ப்போம்.
யுவனின் பின்னணி இசையை பொறுத்தவரை காதல் கொண்டேன் திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த திரைப்படத்தின் மொத்த ஆன்மாவையும் யுவனின் இசை தாங்கி நிற்கும். படம் தொடங்கியது முதல் கிளைமேக்ஸ் காட்சி வரை பின்னணி இசையின் ராஜ்யம்தான். பாடல்கள் அனைத்தும் அட்டகாசமானவை என்பது வேறு விஷயம். படத்தில் சோனியா அறிமுகமாகும் காட்சி, தனுஷ் வகுப்பறையில் முதன் முறையாக வரும் காட்சி, போர்டில் தனுஷ் கணக்கு போடும் காட்சி, கல்லூரி செமினாரில் பேசும் காட்சி, தனுஷுக்கு சோனியா நீச்சல் கற்றுக் கொடுக்கும் காட்சி என ஒவ்வொன்றிலும் சில நொடிகளே வந்து செல்லும் பின்னணி இசையை வழங்கியிருப்பார்.
ஆனால், 2 முதல் 3 நிமிடங்கள் நீடிக்கும் சில காட்சிகளை தன்னுடைய இசையால் அவ்வளவு அழகாக்கி இருப்பார். வகுப்பறையில் சோனியாவும், தனுஷும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளும் காட்சி. அவ்வளவு அற்புதமான இசைக் கோர்வை அது. அதேபோல், சோனியா வீட்டில் அவரது அறைக்குள் தனுஷ் நுழைந்தவுடன் துள்ளலை மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பின்னணி இசையை வழங்கியிருப்பார். அந்தக் காட்சியின் பின் பகுதியில் தனுஷ் வலியில் துடிக்கும் போது, அவரது உடலில் இருக்கும் காயத்தை சோனியா பார்க்கும் போது என ஒவ்வொரு ஃபிரேமுக்கும் உணர்வுக்கு ஏற்றாற்போல் இசையமைத்திருப்பார்.
படத்தில் சோனியாவுக்கும் அவரது காதலனுக்கும் இடையில் ஒரு அற்புதமான பின்னணி இசை வரும். செல்போனில் நீண்ட நாட்கள் அது ரிங்டோனாகவும் வலம் வந்தது. படத்தின் ஒரு கட்டத்தில் தனுஷ் தன்னுடைய காதலை சோனியாவிடம் சொல்வதற்காக பூங்கொத்துடன் செல்வார். ஆனால், தனுஷை நடுவில் உட்கார வைத்துக் கொண்டே சோனியாவும் அவரது காதலனும் தங்களது காதலை பரிமாறிக் கொள்வார்கள். அப்போது, தனுஷின் வலியை தன்னுடைய இசையால் நமக்கு கடத்தி இருப்பார் யுவன்.
படத்தின் பிற்பகுதியில் வில்லத்தனமான இசை இருக்கும். சோனியாவிடம் தனுஷ் சொல்லும் அந்த கடந்த வாழ்க்கை பற்றி வரும் காட்சிகள் அனைத்திற்கும் தனிவகையான சோகமான இசை இருக்கும். அந்த சிறுவர்கள் தப்பித்து கேட்டை திறந்து வெளியே வரும் போதும் விடுதலையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இசை இருக்கும். தனுஷ் கொலைகள் செய்யும் போது ஹாரர் இசை போட்டியிருப்பார்.
படத்திற்கு முத்தாய்ப்பாய் கிளைமேக்ஸ் காட்சியின் பின்னணி இசை அமைந்திருக்கும். மலையின் உச்சியில் இருந்து தனுஷ், சோனியா, அவரது காதலன் மூவரும் சரிந்து கீழே வீழ்வார்கள். அப்போது, ஒரு மரத்தை சோனியா பிடித்துக் கொண்டிருக்க அவரது இரண்டு கைகளில் ஒன்றில் தனுஷ், மற்றொரு கையில் காதலன் இருப்பார்கள். மழை கொட்டிக்கொண்டிருக்கும். இருவரில் ஒருவரை மட்டும் காப்பாற்ற முடியும் என்ற நிலை.
தனுஷை விட்டுவிடுமாறு அவரது காதலன் சொல்ல சோனியா மறுத்துவிடுவார். சோனியா இருவரையும் பார்த்து அழுவார். அப்படியே அனைத்து இசையும் நின்று போகும். எந்த சத்தமும் இருக்காது. சோனியாவின் அழுகை மட்டும் தனியாக கேட்கும். அந்த இடத்தில் அற்புதமான ஒரு ஹம்மிங் வரும். படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவும் அந்த ஹம்மிங்கில் தான் இருக்கிறது. படத்தின் பல இடங்களில் அந்த ஹம்மிங் வரும். இப்படி காதல் கொண்டேன் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் யுவன் இசை மூலம் ராஜ்யம் செய்து இருப்பார்.
யுவனின் இசை வரலாற்றில் காதல் கொண்டேன் சிறப்பான இடம் பெறுவதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்தியாவிலே ஒரு படத்திற்கு பின்னனி இசைக் கோர்வைகளை தனி ஆல்பமாக வெளியிட்டது காதல் கொண்டேன் படத்திற்கு தான். மொத்தம் 20 டிராக் கொண்ட ஆல்பத்தை ஹாலிவுட் பாணியில் யுவன் வெளியிட்டார். அதில், படத்தில் இடம்பெறாத சில டிராக்கும் இருந்தது. அத்துடன் 4 சிறிய பாடல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காதல்கொண்டேன் ஆல்பம். தற்போது 9 பிஜிஎம் டிராக் தீம் மியூசிக் என்ற பெயரில் நமக்கு கிடைக்கிறது.
ஆத்மார்த்தமான இசையை வழங்குபவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால், இன்றளவும் யுவனிடம் இருந்து அவரது ரசிகர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை நிச்சயம் யுவன் அறிந்திருப்பார். இசைப்பயணத்தை தொடருங்கள் யுவன்...