‘பொம்மை நாயகி’ திரைப்படம் வருகிற 3-ம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் யோகி பாபு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது, “யோகி பாபு ஒரு நல்ல நடிகர். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது. அதை வைத்து தான் இந்தப் படத்திற்கு அவரை தேர்வு செய்தோம். கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கழிவிரக்கம் என்பது எனக்கு சரியானது இல்லை.
ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். அவ்வாறு உள்ள கதைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன். யோகி பாபுவை வைத்து தான் இந்தப் படத்தை கொண்டு செல்வோம். இந்த சமூகம் எனக்கு தந்ததை திருப்பி தர வேண்டும் என்ற சமூக அக்கறை தான் என்னுள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் சிறிய படங்களை ஓடிடி தளங்கள் வாங்கியது. ஆனால் தற்போது அவற்றை வாங்குவது இல்லை.
நிறைய சின்ன தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை வெளியிட பிரச்சனைகள் உள்ளது. நெட் ஃப்ளிக்சிடம் சிறிய படங்களை வாங்க வேண்டும் என்று கோரிக்கையாக வைத்தேன். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்று சொல்லி விட்டார்கள். சிறிய படங்களுக்கு மக்கள் ஆதரவும் கிடைப்பது இல்லை. அந்த மாதிரி சிக்கல்களிலும் மக்கள் பிரச்சனையை எடுத்து செல்ல வேண்டும் என்று எடுத்தது இந்தப் படம். டிஜிட்டல் யுகமும் சின்ன படங்கள் வரவேற்பு இல்லாததற்கு காரணம். மனநிறைவோடு சொல்கிறேன் அனைவருக்கும் பிடித்த படமாக அமையும் ‘பொம்மை நாயகி’. யோகி பாபுவின் மற்ற ஒரு பரிமாணம் தான் இந்த படம். நியாயமான விசயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.
யோகி பாபு பேசுகையில், “இந்தப் படத்தில் என்னை நகைச்சுவை பண்ண விடவில்லை, ஏன் என்றால் இது ஒரு உணர்வுபூர்வமிக்க படம். மகள்களை பெற்ற அப்பாவிற்கு என்ன வலி என்பதை இப்படத்தின் மூலம் அறிந்து கொண்டேன். ஒரு நகைச்சுவை நடிகனாக இருந்தும் எல்லோரும் என்னை நல்ல எமோஷனலாக நடிக்கிறேன் என்றனர். ஆனால் அது இயக்குநர் வேலையின் பிரதிபலிப்பு. எல்லோரும் என்னை காமெடியன் என்று சொல்லுவது தான் என் தொழில். எப்போதும் நான் காமெடியன் தான்” என்று தெரிவித்தார்.