‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் நேரம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது.
கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படமும் முதல்பாகத்தைவிட வசூலில் பெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இந்தப்படம் கொண்டுள்ளது. ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படம், 2 மணி நேரம் 35 நிமிடங்களைக் கொண்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் சுமார் 13 நிமிடங்கள் கூடுதலாக உள்ளது.
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.