பட்டியலின பெண் பத்திரிகையாளர்களின் கதை - ஆஸ்கர் விருதை தட்டித் தூக்குமா இந்திய ஆவணப்படம்

பட்டியலின பெண் பத்திரிகையாளர்களின் கதை - ஆஸ்கர் விருதை தட்டித் தூக்குமா இந்திய ஆவணப்படம்
பட்டியலின பெண் பத்திரிகையாளர்களின் கதை - ஆஸ்கர் விருதை தட்டித் தூக்குமா இந்திய ஆவணப்படம்
Published on

94-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' முதன்முறையாக தேர்வாகி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெளியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் வரும் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விருதைப் பெறுவது என்பது உலக அளவில் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களின் மிகப் பெரிய கனவு என்றே கூறலாம். இந்நிலையில், இந்த விழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் இறுதிப் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

இதில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் சிறந்த திரைப்படம் அல்லது சிறந்த அயல்மொழித் திரைப்படம் பிரிவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு பிரிவுகளிலும் இடம்பெறாமல் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. இதேபோல் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ திரைப்படமும் ஆஸ்கர் போட்டியில் இடம்பெறவில்லை. பெரிதும் நம்பிக்கை வைக்கப்பட்ட இந்தப் படங்கள் இறுதிப் பட்டியிலில் இருந்து வெளியேறியுள்ளன.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த இயக்குநர்கள் ரிண்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இணைந்து இயக்கிய, 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற ஆவணப்படம், இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஆவணப்படம் முதன்முதலாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து, பரிந்துரை செய்யப்பட்ட 15 படங்களில் இடம்பெற்றது. பின்னர் அதிலிருந்து தேர்வாகி, இறுதிப் போட்டியில் இடம்பெறும் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது 'ரைட்டிங் வித் ஃபயர்'.

இந்த ஆவணப் படம் பீகாரின் சீதாமர்ஹி பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் உள்ள ஓரங்கட்டப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பட்டியலினப் பெண்களால் நடத்தப்படும் 'கபர் லெஹ்ரியா' என்ற சமூகப் பத்திரிகையின் எழுச்சியை, உயிரோட்டமான கதையுடன் கூறியுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான சுஷ்மித் கோஷ் கூறுகையில், “இந்திய ஆவணப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வாவது இதுவே முதல் முறை. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்திய சினிமாவுக்கே இது ஒரு மிக முக்கியமான தருணம். ‘ரைட்டிங் வித் ஃபயர்’ ஆவணப்படம் தலித் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றியது. வலிமை என்றால் என்ன என்பதையும், இந்தக் கால பெண்களைப் பற்றிய படமாகவும் இது உருவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com