”என்னை தாலாட்ட வருவாளா, ஒளியிலே தெரிவது தேவதையா..”- கவிஞர், பாடலாசிரியர் பழனிபாரதி பிறந்தநாள் இன்று!

இசைக்கு இனிமை சேர்க்கும் பாடல் வரிகள் மூலம், ரசிகர்களின் மனதில் ஆழ்கடல் முத்தாய் பதிந்திருப்பவர், கவிஞர், பாடலாசிரியர் பழனி பாரதி. அவருக்கு இன்று பிறந்தநாள்.
பழநிபாரதி
பழநிபாரதிகோப்பு படம்
Published on

தமிழ் சினிமாவிற்கு பத்திரிகைத் துறையில் இருந்து வந்த முக்கிய கலைஞர்களில் ஒருவர் பழநிபாரதி. பிரபல கவிஞர் சாமி பழனியப்பனின் மகனான இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். சென்னையில் படிப்பை முடித்த இவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் தொற்றிக் கொண்டது.

பத்திரிகையில் பணியாற்றி வந்த அவர், கவிதைகள் மூலம் தனக்குள் இருந்த கலைஞனை வெளியே கொண்டு வந்தார். பணிகளுக்கு இடையே நெருப்புப் பார்வைகள் என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி, இலக்கிய உலகில் பாராட்டு பெற்றார் பழநிபாரதி. உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். அவரின் பேனா பேசிய பேச்சும், எழுத்தின் வீச்சும் அவரை திரைத்துறை நோக்கி அழைத்துச் சென்றன.

பழநிபாரதி
பழநிபாரதி

1991ஆம் ஆண்டு வெளியான விக்ரமனின் பெரும்புள்ளி படத்தில் முதல் பாடலை எழுதினார், பழநிபாரதி. அதன்பின் புதிய மன்னர்கள், முறை மாமன், மேட்டுக்குடி என பல முக்கிய திரைப்படங்களின் பாடல்களுக்கு வரிகளை வடித்துக் கொடுத்திருக்கிறார், இந்த பாட்டுக் கவிஞன். தளபதியாக கொண்டாடப்படும் விஜய்க்கு திருப்புமுனை படைப்பாக அமைந்தது பூவே உனக்காக இப்படத்தில் உள்ள பாடல்களை அவ்வளவு நேர்த்தியாக செதுக்கிருப்பார்.

அதில், பழநிபாரதி எழுதிய பாடல்கள் இன்றுவரை ரசிக்கப்படும் க்ளாசிக் ஹிட் வரிசை என்றே சொல்லலாம். கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா, சரத்குமாரின் சூர்யவம்சம், அஜித்தின் உல்லாசம், ரஜினியின் அருணாச்சலம் என முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் முக்கியமான பாடலாசிரியர் ஆனார், பழநிபாரதி.

இந்த வரிசையில், இளையராஜா இசையில் உருவான, காதலுக்கு மரியாதை திரைப்படத்துக்கு என்றுமே தனி இடம் உண்டு. நாம் அடிக்கடி மனதுக்குள் முணுமுணுக்கும் பல ஹிட் பாடல்கள் இவர் எழுத்தில் உருவானவையே.

இத்துடன், “இளங்காத்து வீசுதே” “என்னவளே என்னவளே” “ஒளியிலே தெரிவது தேவதையா” “பாட்டு சொல்லி பாட சொல்லி” “முன் பனியா முதல் மழையா” “ரோஜா பூந்தோட்டம்காதல் வாசம் காதல் வாசம்” “ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்” “சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும்” என பல பாடல்களை முன்னனி நடிகர்களுக்கு தனது வரிகளை கொடுத்துள்ளார்.

நினைவில் நீங்காத பல இசையமைப்பாளர்கள் உடன் கைகோர்த்து பல மெகாஹிட் பாடல்களை கொடுத்த பாடலாசியர்களில் பழநிபாரதி மிகவும் முக்கியமானவர் ஆவார். 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பழநிபாரதி, திரைப்பணிக்காக பல முக்கிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை எழுதி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் பழநிபாரதி, தன் தனித்துவ வரிகளுக்காக என்றும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com