'ரீல்' அரசியலை ! 'ரியலில்' காட்டுவாரா ரஜினி ?

'ரீல்' அரசியலை ! 'ரியலில்' காட்டுவாரா ரஜினி ?
'ரீல்' அரசியலை ! 'ரியலில்' காட்டுவாரா ரஜினி ?
Published on

நம் அனைவருக்கும் சிறு வயதில் இருந்தே பயிற்று வைக்கப்பட்ட ஒரு விஷயம் இந்தியா என்பது ஜனநாயக நாடு. இங்கு எல்லோரும் சமம், இதில் மிக முக்கியமான வாசகம் நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதே. ஆனால் நிஜத்தில் அப்படியா நிகழ்கிறது ? எல்லா பெரு நகரங்களிலும் குடிசைப் பகுதிகள் இருக்கிறது. ஏன் இருக்கிறது ? என்ற கேள்வி நமக்குள் எப்போதாவது எழுந்திருக்கிறதா ?. ஆம், பெரு நகரங்களில் குடிசைகள் இருந்தால்தான் மற்ற பகுதிகள் சுத்தமாக இருக்கும் என்பதே பலரது எண்ணம். பெருநகரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்க இந்தக் குப்பைகளில் இருந்து தினமும் வேலைக்கு வெளியே வருவதே காரணம். அந்த குடிசைப் பகுதிகளில் அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் வாழ்வார்கள். ஆனால், அதுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வளர்ச்சி என்ற பெயரில் ஆபத்து வந்தது. 

பெருநகரங்களை அழகாக்கிறோம் என்ற பெயரில் பல மாநில முக்கியத் தலைநகரங்களில் குடிசைப்பகுதிகளில் இருந்த மக்கள் விரட்டப்பட்டு, நகருக்கு வெளியே உள்ள அரசாங்கம் கட்டித்தந்த அடுக்கு மாடியில் குடியமர்த்தப்பட்டனர் ஒரு அகதிகள் போல. காலம் காலமாக இருந்தவர்களுக்கு இடம் சொந்தமில்லை என்றானது, இது தொப்புள் கொடி உறவை அறுப்பது போன்று என மேல்தட்டுமக்கள் அறிய வாய்ப்பில்லை. சென்னையின் பூர்வ குடிகள் சமீபத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் கூட சமீபத்தில் எழுந்திருந்தது . 

இந்த நுட்பமான பிரச்சனையைதான், இல்லை இல்லை அரசியலைதான் காலா மூலம் பேசியிருக்கிறார் பா.ரஞ்சித். மும்பை தாராவி குடிசைப் பகுதியில் இருக்கும் தமிழர்களை விரட்டியடிக்கும் வேலையை , எப்படி மராட்டிய மக்கள்தான் இம்மண்ணில் இருக்க வேண்டும் என்று சில அமைப்புகள் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். என்னென்ன சூழ்ச்சி செய்து மக்களை பிளவுப்படுத்தி வைக்கின்றனர். இத்தனை பிரச்னைகளையும் கலைத்து ஒரு தலைவன் எப்படி உருவாகிறான், அவன் அதிகார வர்த்தகத்தை எப்படி எதிர்க்கிறான் என்பதே காலாவாக திரையில் வரும் ரஜினியின் கதாப்பாத்திரம். இதற்கு நேரெதிர் கதாப்பாத்திரம் ஹரிதாதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நானா பட்டேகர். அதிகாரம் கைப்பற்ற துடிக்கும் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல மதரீதியில் மக்களை பிளவுப்படுத்தும் ஒரு வெறியர் என வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நானாவின் செயல்பாடுகள் வலதுசாரி சிந்தனையாளர்களை அடையாளப்படுத்துகிறது.

காலாவால் ரஜினிக்கு நன்மை !

ரஜினி மீது வைக்கப்படும் ஆகப்பெரும் விமர்சனம் அவர் மராட்டியர் என்பதே. ஆனால் அந்த பிம்பத்தை கட்டுடைக்கவே "ஜெய மகராஷ்ட்ரா" என நானா பட்டேகர் கதற, அதனை எதிர்க்கும் தமிழனாக ரஜினி கூறுவது இதுதான் "இந்தக் கட்டை இந்த மண்ணுல தான் முளைச்சது, இந்த மண்ணுல தான் வேகும்" என்று தமிழ்நாடு மீதான தன் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், ரஜினி பாஜகவின் பி டீம் என பிற கட்சிகளால் அடையாளப்படுத்துகிறார். அதனை உடைக்க விரும்பியுள்ளார் ரஜினி, எனவேதான் ஒட்டுமொத்த திரைப்படமே வளர்ச்சி என்ற பெயரால் அடித்தட்டு மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான ஒரு போர்க்குரலாக வந்துள்ளது. பாஜக எங்கும் எப்போதும் எதிலும் முன்னெடுப்பது வளர்ச்சி என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். காலா படம் ரஜினியின் குரலாக இருக்கும்பட்சத்தில் அவர் பாஜக ஆதரவு இல்லை என்றும் தெளிவுப்படுத்துவதாக எடுத்துக்கொளள்ளலாம்.

சமூக விரோதிகள் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைப்பெற்றதற்கு போராட்டம் செய்த மக்களிடையே சில சமூக விரோதிகள் புகுந்ததுதான் காரணம் என ரஜினிகாந்த் பேசியிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பினருடையும் கடும் கண்டனங்களும் விமர்சனமும் எழுந்தது. ஆனால் எப்படி சமூக விரோதிகள் மக்கள் போராட்டத்தின்போது உள்ளே வருகிறார்கள், சமூக விரோதிகள் இப்படித்தான் ஊடுருவினர் என்பதற்கான காட்சிகளும் காலாவில் இருக்கிறது.

ரஞ்சித் நினைத்தது நடந்ததா ?

மெட்ராஸ், கபாலியில் குறைந்தபட்சம் அரசியல் பேசி வந்த ரஞ்சித், இதில் முழுவதும் பேசியிருக்கிறார். ராவணனாக ரஜினியையும், ராமராக வில்லனையும் சித்தரித்திருக்கிறார் ரஞ்சித். அதற்கு ஏற்றார்போல ரஜினியின் படுக்கை அறையில் "ராவணக் காவியம்" புத்தகத்தை வைத்ததும் அதற்கான குறியீடும். பின்பு, கருப்பும், சிவப்பும்தான் தமிழர்களின் வண்ணம் என்று படத்தில் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளை உடை போட்டிருக்கவன் எல்லாம் யோக்கியவனும் இல்ல, கருப்பா இருக்கிற யாரும் வில்லனும் இல்லனும் அழுத்தம் திருத்தமா காலாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காலா முழுவதும் வலதுசாரி சிந்தனையாளர்களை கலாய்த்துள்ளார் ரஞ்சித்.

வலதுசாரி அமைப்பினரை தாக்குவதற்காகவே ராமாயணம் பயன்படுத்தப்பட்டதாக நாம் எண்ணிக்கொள்ளலாம். ஆனால், ராமாயணத்தை தெய்வநூலாக வழிப்படும் பெரும்பான்மை மக்களை நோகடிக்கவில்லை ரஞ்சித். இதில் இன்னும் சிறப்பானது தலித் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் போன்றவை தலித் என்ற பெயரை பயன்படுத்தி எப்படி தங்களை வளர்த்துக் கொள்கின்றன, போலி போராளிகள் யார் யார் என்பதை குறித்தும் விமர்சிக்க தவறவில்லை. இறுதியாக "என்ட் கார்டில்" நடிகர் நடிகையர் பெயர்களில் இருந்த ஜாதிய அடையாளங்களும் எடுக்கப்பட்டுள்ளது, அதாவது வெறும் "நானா", "ஹூமா"தான் பட்டேகரும் குரேஷியும் நீக்கப்பட்டது, திரையில் ரஞ்சித் செய்த புரட்சி.

காலாவால் யாருக்கு லாபம் ?

ரஞ்சித் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், போராட்டங்களையும் படமாக்குபவர். அவர் ரஜினி எனும் மிகப்பெரிய பிம்பத்தின் வாயிலாக காலாவில் நிகழ்கால அரசியலை பேசியுள்ளார். இதனால், ரஞ்சித் தான் சொன்ன நினைத்ததை "மேன் ஃபார் மாசஸ்" மூலம் சொல்லிவிட்டார். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைக்க வேண்டும். அதற்கு ரஞ்சித்தை பயன்படுத்திக்கொண்டார் என்றுக் கூட சொல்லலாம். இதில் ஒரு படைப்பாளியான ரஞ்சித்துக்கும் சரி, அரசியலில் களம்காண உள்ள ரஜினிக்கும் சரி காலா லாபமே. ஆனால், எதிர்காலத்தில் "காலா" என்று திரையில் இருந்த ரஜினியின் பிம்பம், நிஜத்தில் எப்படியெல்லாம் வெளிவரப் போகிறது என்பது ரஜினியின் கையில் உள்ள சூத்திரம். அரசியல்வாதியாக ஜெயிக்க, ரஜினி காலாவை நிஜத்திலும் பின்பற்றுவாரா என்பதே கேள்வி !!


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com