தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இன்று மாலை பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில்பதிவிட்டு வந்தனர். ஆனால், அது உண்மையில்லை. பிகில் சிறப்புக் காட்சிக்கு இந்த நிமிடம் வரை அரசு அனுமதி அளிக்கவில்லை. ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில், ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனம் சார்பில், சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கொடுத்த அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.
முன்னதாக தீபாவளியையொட்டி திரையரங்குகளில் எந்தப் படத்திற்கும் இதுவரை சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். அதை மீறி சிறப்புக் காட்சிகளை திரையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் "ஊடகங்கள் பிகிலை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. ஆகவேதான் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை " என்று கூறினார்.
ரசிகர்களும் கூட முதல் காட்சி பார்க்க 2,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே சிறப்பு காட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீண்டும் உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடம்பூர் ராஜூ மட்டுமல்லாமல் மீன் வளத்துறை அமைச்சரான ஜெயக்குமாரும் "சிறப்புக்காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதால்தான் அதற்கு அனுமதிக்கவில்லை. முறையான கட்டணம் வசூலித்தால் சிறப்புக்காட்சி அனுமதியை அரசு பரிசீலிக்கும். பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்தி சிரமப்படக்கூடாது என்பதால்தான் நடவடிக்கை. பொதுமக்களின் நலன் கருதியே அரசு நடவடிக்கை எடுக்கிறது" என்றார்
அடுத்தடுத்து அமைச்சர்களின் பேட்டியால் பிகில் தயாரிப்பாளர்கள் சற்று ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் பிகில் சிறப்புக் காட்சியை பார்க்க "வெறித்தனத்தோடு" காத்திருப்பதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழக அரசு மனம் வைத்து சிறப்புக் காட்சிக்கு அனுமதியளிக்குமா இல்லையா என்பதுதான் பிகிலின் திகிலான க்ளைமேக்ஸ்.