இந்தியாவின் சினிமாத்துறை என்றாலே இந்தி படங்கள்தான் சர்வதேச அரங்கில் அண்மைக்காலம் வரை ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த நிலையில் கடந்த சில தசாப்தங்களாக மாறியிருக்கிறதென்றால் அது தென்னிந்திய படங்களுக்கு சர்வதேச அரங்கில் கிடைக்கப்பெறும் அங்கீகாரமே ஆகும்.
அதுவும் கமெர்சியல் படங்களாக மட்டுமல்லாமல் மண் சார்ந்த உண்மை சம்பவங்களை அதன் தன்மைக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் உருவாக்கப்படுவதால் அதற்கான அங்கீகாரம் எந்த விளம்பரத்துக்கும் உட்படாமல் கிடைத்து வருவதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி இருக்கையில், திரைத்துறையினரால், சினிமா ரசிகர்களால் இளம் இயக்குநர்களுக்கு மாஸ்டராக கருதப்படும் மணிரத்னத்திடம் இந்தி சினிமா குறித்தும் அதற்கான சர்வதேச தரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நச்சென பதிலளித்திருக்கிறார்.
சென்னையில் உலக சினிமாவுக்கான ஒரு வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், பசில் ஜோசஃப், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தார்கள்.
அப்போது இயக்குநர் மணிரத்னத்திடம், “இந்திய சினிமா என்றாலே மேற்கு நாடுகளில் தொடர்ந்து இந்தி சினிமாதான் குறிப்பிடப்படுகிறது” எனக் கேட்கப்பட்டது. அதற்கு, “இந்தி சினிமா துறையினர் தங்களை பாலிவுட் என அழைத்துக் கொள்வதை நிறுத்தும் போது இந்திதான் இந்தியாவின் சினிமா எனும் கருத்து தானாக மறைந்துவிடும்” என்று மணிரத்னம் கூறியிருந்தார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நான் ஒன்றும் இந்த பாலிவுட், கோலிவுட் போன்ற 'wood'-களின் ரசிகன் அல்ல. நாம் இவை அனைத்தையும் இந்தியாவின் சினிமா என்றுதான் பார்க்க வேண்டும்.” என்றும், “இந்தியாவின் நிலம் சார்ந்த, மக்கள் சார்ந்த கதைகளை படங்களாக எடுக்க வேண்டும்.” என்றும் பேசியிருந்தார். இதையடுத்து பேசிய காந்தாரா படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, “காந்தாரா ஒரு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பான் இந்தியன் படம். உள்ளூர் மக்களை பற்றிய, அவர்களின் வாழ்வியல் பற்றிய படங்கள் உருவாகும் போது அதனை மக்கள் கொண்டாடி அங்கீகரிக்கிறார்கள். இப்படியான கதைக்களங்கள் வரும் போது உரிய வரவேற்பு தானாக வந்து சேர்கிறது” என்றார்.