முறுக்கு மீசை, கூரான பார்வை, வெளிப்படையான பேச்சு என்று ஒரு கிராமத்து மனிதனாக அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் வேல ராமமூர்த்தி, ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி என்ற கிராமத்தில் பிறந்தவர்.
முழுக்க முழுக்க விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்ட குடும்பத்தில் பிறந்த இவருக்கு, விவசாய வேலைகள் அனைத்தும் அத்துப்படி.
கிராமத்து மக்களின் அன்பு, கோபம், அறம் என்று அனைத்தையும் தனது எழுத்துக்களால் அழகுற காட்சிபடுத்தியவர்தான் வேல ராமமூர்த்தி. இன்று ராமமூர்த்தியை பலருக்கும் ஒரு நடிகராக தெரிந்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் அவர் விவசாயி, அதனைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஒரு எழுத்தாளர்.
நாவல்களில் ‘குருதி ஆட்டம்’, ‘பட்டத்து யானை’ என்றால், சிறுகதைகளில் ‘கோட்டைக்கிணறு’, ‘இருளப்பச்சாமியும் 21 கிடாயும்’ என்று பல தளங்களில் எழுத்தாளராக மிளிர்கிறார் ராமமூர்த்தி.
புகழ்பெற்ற இவரது நாவலான குற்றப்பரம்பரை பாலாவின் படைப்பில் படமாக இருந்த நிலையில், பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட மோதலால் படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, சசிகுமார் இயக்கத்தில் வெப் சீரிஸாக வெளிவர இருக்கிறது குற்றப்பரம்பரை.
மாரிமுத்துவுக்கு எப்படி, ‘ஏம்மா ஏய்’ என்ற வசனம் பேசப்பட்டதோ, அப்படி ராமமூர்த்திக்கு ‘இளந்தாரிப்பய’ என்ற வசனம் பேசப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு குடிபெயர்ந்த வேல ராமமூர்த்தி, 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார், அஞ்சல் நிலையத்திலும் பணியாற்றியுள்ளார். எழுத்தாளராக மிளிர்ந்த இவர், ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, பல பெரிய படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நண்பராகவும் அறியப்படுகிறார். தினமும் உடற்பயிற்சி, தண்டால் எடுப்பது, குரல் பயிற்சி என இன்றளவும் உழைத்து வரும் வேல ராமமூர்த்தி, எதிர்நீச்சலில் ஏற்றுள்ள எதிர்மறை பாத்திரத்தால் மக்கள் மனதில் இன்னும் இன்னும் ஆழமாக பதிவார் என்பதில் சந்தேகமில்லை.