'சர சர சார காத்து' பாடல் வரிகள் யாருக்கு சொந்தம் ?

'சர சர சார காத்து' பாடல் வரிகள் யாருக்கு சொந்தம் ?
'சர சர சார காத்து' பாடல் வரிகள் யாருக்கு சொந்தம் ?
Published on

96 படம் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார் பாடலாசியர் கார்த்திக் நேத்தா. நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதிக வெளிச்சத்தில் வராமலே இருந்த கார்த்தி நேத்தா 96க்கு பிறகு அதிகம் பேசப்பட்டு வருகிறார். இதற்கிடையே வாகை சூடவா படத்தில் 'சரசர சாரக்காத்து' பாடலை எழுதியது கார்த்திக் நேத்தா என்றும் அதில் சில வரிகளை வைரமுத்து மாற்றி அமைத்து அவரது  பெயரில் வெளியிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து வைரமுத்து தரப்போ அல்லது கார்த்திக் நேத்தா தரப்போ தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. ஆனால் திரையுலகைச் சேர்ந்த பலர் கூறுவது என்னவென்றால், பாடலை முதலில் கார்த்திக் நேத்தா எழுதியதாகவும், பின்னர் அதில் சில வரிகளை வைரமுத்து மாற்றியதாகவும்,  அந்த பாடலில் இருவரின் வரிகளுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் பாடல் விவகாரம் குறித்து கட்டளை ஜெயா என்பவர் தனது பேஸ்புக் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்  அங்கீகாரம் கிடைக்காத பாடலாசிரியர்கள் பலருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் சகஜம் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாடல் வரிகள் என்னுடையது என்று சொல்லி கார்த்திக் நேத்தா தன்னிடம் வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் உள்ள பதிவின்படி, 

''அங்கீகாரம் கிடைக்காத பாடலாசிரியர்கள் பலருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் சகஜம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாடல் வரிகள் தன்னுடையது என்று சொல்லி கார்த்திக் நேத்தா என்னிடம் வருந்தியுள்ளார். திருடா திருடி படத்தில் 'அழகா இருக்காங்க பொண்ணுங்க அழகா இருக்காங்க' என்ற பாடலை எழுதிய கவிஞர் த.கண்ணன் அவர்களும் 'வைரமுத்து அவர்கள் தன் வரிகளை முகவரி படத்தில் பயன்படுத்திக்கொண்டார்' என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் கூறியுள்ளார்.

ஒரு பாடலுக்கான இசையை உருவாக்கும்போது இசையமைப்பாளரே சில வரிகளைப் போட்டுப் பாடி வைத்திருப்பார். பாடலாசிரியர் அந்த இசைக்கு எழுத முயற்சிக்கும் போது இசையமைப்பாளரின் சில வரிகளை மிஞ்சி எழுதமுடியாத அளவிற்கு இருக்கும். அந்த மாதிரியான இசையமைப்பாளரின் வரிகளை பாடலில் அப்படியே பயன்படுத்திக்கொள்வார்கள். சில நேரங்களில் கதைக்குத் தேவையாய் இருப்பதாகச் சொல்லி இயக்குனர் சில வரிகள் சொல்வார். அந்த வரிகளையும் தவிர்க்க முடியாமல் பாடலில் சேர்க்க வேண்டி இருக்கும். பாடலாசிரியரின் எல்லாப் பாடல்களில் உள்ள எல்லா வரிகளும் அவரின் வரிகளாக மட்டுமே இருக்காது.

புதிய இசையமைப்பாளர் தான் உருவாக்கிய இசையை வரிகள் இல்லாமல் இயக்குனருக்குப் போட்டுக்காட்டினால் அந்த இசையின் அருமையை இயக்குனரால் உணர முடியாமல் போய்விடும் என்பதற்காக தனக்குப் பழக்கமான பாடலாசிரியர் கொண்டு வரிகளை எழுதி பாடிக் காட்டுவார்கள். அப்படி தற்காலிகமாக எழுத கார்த்திக் நேத்தா அழைக்கப்பட்டிருக்கிறார். கார்த்திக் நேத்தா வரிகள் இசையமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் பிடித்துப்போயிருக்கிறது. ஆனால் பிரபலமான பாடலாசிரியர் பாடல் எழுதியிருந்தால்தான் மக்கள்மத்தியில் படமும் அப்படப்பாடல்களும் பிரசித்தி பெறும் என்பதால் கார்த்திக் நேத்தா எழுதிய 'சர சர சாரக்காத்து' பாடலில் சில வரிகளை மட்டும் திருத்தம் செய்திருக்கிறார் வைரமுத்து. மேலும் அப்பாடலை எழுதியவர் வைரமுத்து என பதிவு செய்திருக்கிறார்கள்.

வைரமுத்து மற்றும் கார்த்திக் நேத்தா இருவரின் வரிகளுக்குமே நான் தீவிர ரசிகன். யார் யார் எந்த எந்த வரிகள் எழுதியிருப்பார்கள் என்று என்னால் பிரித்தறிய முடிந்தது...

(சர சர சாரக் காத்து வீசும் போது
சாரப் பாத்துப் பேசும் போது
சாரப் பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...)

- கார்த்திக் நேத்தா

(இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...)

- வைரமுத்து

(டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற)
- கார்த்திக் நேத்தா

(எங்க ஊரு பிடிக்குதா... எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல... சுட்ட ஈரல் மணக்குதா)

- வைரமுத்து

(முட்டை கோழி பிடிக்கவா... முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்... என்ன கொஞ்ச நினைக்க வா
கம்மஞ்சோறு ருசிக்க வா... சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா

மொடகத்தா ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற)

- கார்த்திக் நேத்தா

(புல்லு கட்டு வாசமா... புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தம்மா... மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற... கையளவு மனசுல)

- கார்த்திக் நேத்தா

(கையெழுத்து போடுற... கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல... ஊரில் எந்த பூவும் பூக்கல)
- வைரமுத்து

(ஆட்டு கல்லு குழியில ஒறங்கி போகும் பூனையா
உன்னை வந்து பாத்து தான் கிறங்கி போறேன்யா)
- கார்த்திக் நேத்தா

(மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ)
-வைரமுத்து

(காட்டு மல்லிக பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கு என்ன காச்சலா)
- வைரமுத்து

குறிப்பு: விக்கிபீடியாவில் இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com