கடந்த 2013-ம் ஆண்டு கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை ஏற்பட்டபோது ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
காவிரி நீர் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம், ‘காலா’விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சரிடம் பேசினீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “‘காலா’குறித்து கர்நாடகா முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது. பேசவும் இல்லை” என தெரிவித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான‘விஸ்வரூபம்’படத்தை தமிழகத்தை வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ரஜினி வெளியிட்ட அறிவிப்பில், “ கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்தப் படத்தை முழுவதுமாக தடை செய்யணும் என்ற கருத்திலிருந்து மாறி கமல் வந்த பிறகு கலந்து பேசி கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தற்போதோ ‘காலா’குறித்து கர்நாடகா முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது. பேசவும் இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில்‘காலா’படத்தை வெளியிடப் போவதில்லை என கர்நாடாக வர்த்தக சபை அறிவித்துள்ளது.