அனிமல் திரைப்படம் குறித்து நாம் மீண்டும், மீண்டும் விவாதிக்க வேண்டிய தேவை நிச்சயமாக இருக்கிறது. மிகுவும் பிற்போக்குத்தனமான அடிப்படைவாதம், ஒரு குறிப்பிட்ட தரப்பின் மீது அளவுகடந்த வெறுப்பு, ரத்தவெறி கொண்ட வன்முறை போன்ற பாசிசத்தின் குணாம்சங்களை ரசிக்கும்படியாக ஒரு கலைப்படைப்பு உருவாவது என்பது நம்முடைய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், பின்னோக்கி இழுத்துச் செல்லும் சிந்தனைகளை நியாயப்படுத்துவது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அனிமல் படத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றி என்பது எத்தகைய சமூகத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. இவ்வளவு தூரம் ஏன் அனிமல் படத்தின் விமர்சனம் வைக்க வேண்டியுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
பாசிச வெளிப்பாட்டின் ஒரு அங்கமாக அனிமல் படத்தில் நாஜிக்களின் ஸ்வஸ்திக் சின்னம் ஹீரோயிசத்தோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. இந்திய சினிமா முகமாக சித்தரிக்கப்படும் பாலிவுட் சினிமாக்கள் மேற்கத்திய நாடுகளின் கலாச்சார அம்சங்களை இங்கே பண்டமாக்கி வந்தது.
பெருவாரியான மக்கள் கதைகளில் இருந்து விலகி தனித்திருக்கும் குறிப்பிட்ட சிலருடைய கதைகளை மட்டுமே உருவாக்கியது. உதாரணத்திற்கு காதல், தனிமை, இன்ட்ரோவெர்ட் சங்கதிகள், தனிநபரின் பாலியல் விருப்பங்களை முதன்மைப்படுத்திய படங்களை எடுத்தார்கள். அதற்குள் பழைய நிலவுடைமை குணத்தை பொருத்தியிருப்பது தான் அனிமல்.
ரன்பீர்-க்கு அப்பா தான் ஹீரோ. ரன்பீர் மகனாக வரும் குழந்தைக்கும் ரன்பீர் தான் ஹீரோ. பொதுவாக ஒரு கதாப்பாத்திரத்திற்கு ஏன் இந்த நபரின் மீது இவ்வளவு அன்பை வைத்திருக்கிறது என்பதற்கான காட்சிகள் வைப்பார்கள். ஆனால் அனிமல் திரைப்படத்தில் அதெல்லாம் தேவை இல்லை. அப்பா என்பவர் ஆளுமையை குறிப்பவர், இதன் தொடர்ச்சியாக குடும்பத்தை பாதுகாத்து வழி நடத்தும் பொறுப்பும் ஆண்மகனுக்கே இருக்கிறது. இதெல்லாம் எத்தனை வருடங்களுக்கு முந்திய சமூக நிலைமையின் பார்வை, அதை தூசு தட்டி செழுமைப்படுத்துகிறது படம்.
படத்தில் 'Ruling authority' என்ற தன்மையில் எந்த பெண்களும் இருப்பதில்லை. ராஷ்மிகா உட்பட வீட்டு வேலை செய்யும் பெண்களோடு பெண்களாகத்தான் இருக்கிறார்.
இதற்கென ஒரு வசனத்தையும் இயக்குனம் கக்க வைத்துவிட்டு போகிறார். இது ஆண்களின் உலகம் அப்படித்தான் இயங்குகிறது வேறு வழியில்லை என்று மட்டித்தனமாக பேசி, படத்தின் ரன்பீர் செயலுக்கு முடிந்தவரை நியாயம் கற்பிக்கிறார்.
அவர் பிறந்த இந்த தேசத்தில் எடுத்துக்கொண்டாலே அரசு அதிகார அமைப்புகளில் பெண்கள் வியாபித்து இருப்பதை பார்க்கலாம். ஆண்களின் உலகமாக தான் இருக்கிறது என்பதற்கான அர்த்தம் பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற பொருளில் இல்லை.
ஒன்லைனாக பார்த்தால் அப்பாவின் மீதான மகனின் ஒருதலைக்காதல். அப்படித்தான் சொல்ல வேண்டும். இதில் இவர் ஆழ் மனதிற்குள் பிரச்சனைய அப்பாவுக்கடுத்து நான் தான் சமாளிக்கனும் என்ற எண்ணம் இருக்கிறது. ஏன் இவர் தான் பிரச்சனைய சமாளிக்கனும்னு அவரிடம் கேட்டுப்பாருங்களேன். ஏன்னா நான் ஆம்பள, ஒரு வீரமான ஆண் அப்டிதான் இருப்பானு சொல்லக்கூடும்.
இந்த படத்தின் ரன்பீர் குணத்தை ஊர் பக்கங்களில் இஷ்டத்திற்கு அழிச்சாட்டியம் செய்யும் ஒரு ஆதிக்க மனோபாவம் கொண்ட இளைஞனோடு நிறைய வகையில் ஒத்துப்போகும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆண்கள் தான் சண்டையிட்டு காப்பாற்றி பொருள்சேர்த்து குடும்பத்தை வழி நடத்த வேண்டும். எனக்கடுத்து என் ஆண் வாரிசு அதை செய்யவேண்டும். இது ஆணாய் பிறந்த ஒவ்வோருவருக்குள்ளும் இருக்கும் உடன்படிக்கை என்ற ரகத்தில் க்ளைமேக்ஸில் அப்பா என்று ஓடி வரும் ரன்பீரின் மகனை பார்க்கையில் தோன்றாமல் இல்லை. இதைத்தான் நிலவுடைமை சமூக தன்மை என்று இங்கே சுட்டுகிறோம்.
இதோடு இல்லாமல் துப்பாக்கி மாபியா கும்பல் எல்லாம் பெரிய வளர்ந்த நாடுகளின் புழக்கத்தில் இருப்பவையே. அப்படியான நாடுகளில் தான் விதவித துப்பாக்கிகளும் கார் சண்டைகளும் காட்சிபடுத்தப்படும். இன்னும் இந்தியர்களின் வன்முறை கத்தி போன்ற பொருட்களை தாண்டவில்லை. அத்தனை சகஜமான துப்பாக்கி புழக்கம் இல்லாத ஊர். இங்கு அனிமல் படத்தில் காட்டப்படும் எதற்கும் துளியளவுக்கூட கலச்சார தொடர்பு இல்லை. அப்படியே John Wick படம் பார்த்த வேகத்தில் எடுக்க வந்தது போல் இருக்கிறது.
ஜான் விக் படம் கூட மனைவி இறந்து கடைசியாக அவனுக்கென இருந்த நாய் குட்டியையும் கொன்றுவிடுகிறார்களே ஐயகோ என்று கவலைப்பட ஒரு காரணம் இருந்தது. இதில் அதுவும் இல்லை. யாருடா இந்த அனில்கபூர் சொந்தபந்தத்த விட்டு இருக்கான். ஆனா பிரச்சனைனா கிராமப்புற சொந்தங்கள் வருகிறார்கள் என்று பார்த்தால், அது ஒரு வகையான சாதிய உளவியல்.
’நம்மாளுக்காக நான் போகாமல் யாரு போவா’ என்ற குணம். சரி அப்படி யார் வில்லன் என்று தேடினால், ஒழுங்காக இல்லாததால் விரட்டியடிக்கப்பட்ட சகோதரர் இஸ்லாமிய மதம் தழுவிகிறாராம். ரன்பீர் கபூர் மாதிரி நல்லொழுக்கத்தோடும் பேரன்போடும் வாழாமல் பகையையும் பழிவாங்கலையும் தேர்ந்தெடுக்கிறார்களாம்.
அதனால், அந்த இஸ்லாமிய சொந்தபந்தத்தை எதிர்த்து சாதி ரீதியாக அணி திரள்வதை தான் படம் காட்டுகிறது. இவையெல்லாம் க்ளைமேக்ஸில் தான் தெரியவரும். அதுவரை மோசமான அருவருக்கத்தக்க வகையில் அப்ரார் (பாபி தியோல்) காட்சிபடுத்தப்படுகிறார்.
இரண்டு மனைவிகள் முன்னிலையில் மூன்றாவது திருமணம், மணமேடையிலே கொலை, கொலை செய்த ரத்தத்தோடு புணர்வது என்று அருவருக்கத்தக்க வகையில் டிசைன் செய்திருக்கிறார்கள்.
முன்பு சொன்னது போல தன்னை தூய ஆரிய இனமாகவும், அதன் வெளிப்பாடாக ஸ்வஸ்திக் சின்னத்தை முன் வைத்தாலும், இந்த கதையோட்டத்தில் இங்கிருக்கும் இந்துத்துவ குணத்தையும் மையப்படுத்தியே இருக்கிறது. ரன்பீர் கோமியம் அருந்துவது ஒன்றும் தவறான குணம் இல்லை. ஆனால் அப்ரார் எப்படி காட்சிப்படுத்தப்படுகிறார் என்பது கொஞ்சம் முக்கியமான ஒன்று.
ஒப்புக்குச் சப்பாணியாக இதில் உள்ள பெண்களின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவு தருகிறாராம் ரன்பீர். தங்கையை அடிக்கும் கணவனோடு வாழ்வதா வெளியே வா, என்றெல்லாம் சொல்லிவிட்டு, பிரசவ வழியில் துடிக்கும் கர்ப்பிணியை மிரட்டும் காட்சி ஒன்று வரும். அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பனிக்குடம் உடைபட்டு நீர் வெளியேரும்.
அப்போதும் இடைவிடாது துப்பாக்கியில் முனையில் மிரட்டுவதும் அதே ஹீரோ தான். அந்த நிலையிலும் அந்த கர்ப்பிணியோடு இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவர்கள் அதன் காரணத்தினால் அவர்களுக்கு பிரசவத்தின் போது என்ன செய்ய வேண்டும் என தெரியும் என்றொரு வசனத்தை வேறு விடுவார். இப்படி ஒரு நாயகன் காதாப்பாத்திரம் சிலாகிக்கப்படும் போக்கு மிக சிக்கலான ஒன்று. ஆணாதிக்கம், பண்ணையார்த்தனம், பாசிச குணாம்சம் இவையெல்லாவற்றையும் சிலாகித்து உயர்த்திப்பிடிப்பதாகவே அனிமல் இருக்கிறது.
ஒரு கலைப்படைப்பு சமூகத்தில் இருந்துதான் உருவாகிறது. அதேபோல், அந்த கலைப்பின் தாக்கமும் சமூகத்தின் மீது நிச்சயம் இருக்கவே செய்யும். அதனால் அனிமல் போன்ற திரைப்படங்கள் மீதான விவாதங்கள் என்பது அடுத்தடுத்து மோசமான படங்கள் வருவதை தடுக்க உதவி செய்யும்.