வாழ்க்கை ஒரு வட்டம்: 'வாட் இஸ் தட்?' - அஞ்சே நிமிஷத்துல அப்பாவோட மகிமை!

வாழ்க்கை ஒரு வட்டம்: 'வாட் இஸ் தட்?' - அஞ்சே நிமிஷத்துல அப்பாவோட மகிமை!
வாழ்க்கை ஒரு வட்டம்: 'வாட் இஸ் தட்?' - அஞ்சே நிமிஷத்துல அப்பாவோட மகிமை!
Published on

நம் குழந்தை பருவத்து நாயகன் யார் எனக் கேட்டால் யோசிக்காமல் ‘அப்பா’ என்போம். அப்பாவுக்குத் தெரியாத ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை என்பதே குறிப்பிட்ட வயது வரை நம் அனைவரது நம்பிக்கை. அதே தந்தை வயது மூப்பினால் சின்னச் சின்ன விசயங்களைக் கூட மறந்து போகும் விந்தையை என்னவென்று சொல்வது...? வாழ்க்கை என்பது வட்டம் என்ற ஒற்றை வரியைக் கொண்டு உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கும் 5 நிமிட சினிமா தான் ‘வாட் இஸ் தட்.?’ (What Is That?) கிரேக்க மொழியில் ‘டி எய்னாய் அஃப்தோ’ (Ti einai afto).

பூங்கா இருக்கையில் 70 வயது மதிக்கத்தக்க தந்தையும் 30 வயது மதிக்கத்தக்க மகனும் அமர்ந்திருக்கிறார்கள். மகன் தன்கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் முன் இருக்கும் ஒரு செடியின் மேல் குருவியொன்று வந்து அமர்கிறது. இப்போது தந்தை மகனிடன் கேட்கிறார் ‘டி எய்னாய் அஃப்தோ?’ (Ti einai afto) அதாவது Whats is that? அது என்ன...? மகன் சொல்கிறார் ‘அது குருவி அப்பா’... இப்போது குருவி பறக்கிறது. தந்தை தனது கையை நெற்றியில் வைத்து பறக்கும் குருவியை ஆச்சர்யமாக அந்நாந்து பார்க்கிறார். இந்த ஷாட் முக்கியமானது. கேமரா ஒரு குருவிபோல ஏரியல் வியூவில் மெல்ல அசைந்து பறந்து படம் பிடிக்கும். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ஸோய் மாண்டா (Zoe Manta)

இப்போது மீண்டும் குருவி பூங்காவின் வேறு ஒரு இடத்தில் வந்து அமர்கிறது... அப்பா மகனிடம் கேட்கிறார் ‘டி எய்னாய் அஃப்தோ?’ (Ti einai afto)... மகன் கொஞ்சம் சலிப்புடன் “அது குருவிப்பா சொன்னேன்ல நான்” என்கிறார்... “ஓ சரி சரி”. இப்போது குருவி பூங்காவின் வேறு ஒரு பகுதியில் வந்து அமர்கிறது. தந்தை மீண்டும் மகனிடம் அதனை காட்டிக் கேட்கிறார் ‘டி எய்னாய் அஃப்தோ?’ (Ti einai afto)... மகன் கோபத்துடன் எரிந்து விழுவதுபோல சொல்கிறார் “எத்தனை தடவ சொல்றது அது குருவி குருவி”னு. இப்போது தந்தை மெல்ல எழுந்து சென்று ஒரு டைரியை எடுத்து வந்து மகனிடம் கொடுக்கிறார். அந்த டைரியில் என்ன இருந்தது. அதனை படித்த பிறகு மகன் எப்படி ரியாக்ட் செய்தார் என்பதை நீங்களே பார்த்து பரவசமடையுங்கள்.

குறும்படங்கள் இயக்கும் ஆர்வம் கொண்ட இயக்குநர் கான்ஸ்டண்டின் பிலாவியாஸ் (Constantin Pilavios) இப்படத்தை இயக்கி இருக்கிறார். கிரேக்க இயக்குநரான இவரது ப்பாதர்லி லவ் (Fatherly Love), கோனி (Kony) ஆகிய படங்களும் முக்கியமானவை. எப்போதும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிக்குவித்த சினிமாக்கள் மட்டுமே பார்க்கவும் விவாதிக்கவும் தகுதியானவை என நாம் நினைக்க வேண்டியது இல்லை. ‘வாட் இஸ் தட்.?’ போல சில சினிமாக்கள் குறித்தும்கூட நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த 5 நிமிட குறும்படம் 2007ஆம் ஆண்டு வெளியானது. பெரிய அளவில் கவனம் பெறவில்லைதான். ஆனால் இந்தப் படம் குறித்து திரைப்படக் கல்லூரிகளில் விவாதம் செய்வது வழக்கம். சர்வதேச தந்தையர் தினமான இன்று ஒரு 5 நிமிடம் செலவு செய்து இந்த சினிமாவை யூடியூபில் பாருங்கள்.

விழுதுகள் மண் தொட்டு வேர் பிடிப்பதும், வேர்கள் மீண்டும் வளர்ந்து ஆலவிழுதுகளாவதும் தொடர்நிகழ்வுதானே..? வாழ்க்கை என்பது வட்டம். வட்டத்தின் ஒருசுற்றை நாம் விரும்பியோ கடமைநிமித்தமோ நிறைவு செய்யத்தான் வேண்டி இருக்கிறது. இயற்கையின் நியதியும் அதுவே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com