சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் எஃப்.ஐ.ஆரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரவர்த்தி மனுதாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணைக்கு முன், அமெரிக்காவில் வசித்துவரும் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி வீடியோ முறையீடு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைந்த தனது சகோதரருக்கு நீதி கிடைக்கக் கோரி பல்வேறு சமூக ஊடகங்களில் அவர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். வியாழக்கிழமை அவர் மற்றொரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில், சிபிஐ விசாரணைக்கு ஒரே நாடாக ஒன்றாக நிற்போம். பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோருவது நமது உரிமை. உண்மையை தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில், அவர் கையில், ‘’நான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி. எல்லாரும் ஒன்றாக நின்று சிபிஐ விசாரணையை கோருவோம். உண்மையை அறிய நாம் தகுதியானவர்கள். சுஷாந்திற்கு நீதி தேவை. இல்லாவிட்டால் நாம் ஒருபோதும் ஒன்றாக இணைந்து, நிம்மதியான வாழ்வை வாழ முடியாது’’ என்ற வாசகத்தைப் பிடித்திருந்தார்.
இந்த வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே கையில் மற்றொரு வாசகம் எழுதிய அட்டையைப் பிடித்திருந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், ‘நாம் உண்மையைக் கண்டுபிடித்து நீதி பெறும் நேரம் இது. தயவுசெய்து எங்கள் குடும்பத்திற்கும், உலகிற்கும் உண்மையை அறிந்துகொள்ள உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் நிம்மதியாக வாழமுடியாது!! #CBIForSSR உங்கள் குரலையும், கோரிக்கையையும் உயர்த்துங்கள்’’ என்று எழுதியிருந்தது. அந்த பதிவில், சுஷாந்தின் டைரியிலிருந்து சில பக்கங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும், தெளிவான திட்டங்களைக் கொண்டிருந்த ஒருவர், கனவுகளை நனவாக்கத் தெரிந்த ஒருவர் எனவும், எப்போதும் பாஸிட்டிவாக இருந்த ஒருவர் என் தம்பி, அவருக்கு வணக்கம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையை பீகாரில் இருந்து மும்பைக்கு மாற்றக்கோரிய ரியா சக்ரவர்த்தியின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த செவ்வாய் அன்று, சிபிஐ விசாரணையை எதிர்க்கவில்லை என்றும், அதை மகாராஷ்டிரா அரசாங்கத்தின் மூலம் செய்யவேண்டும் என்றும் ரியாவின் சட்ட ஆலோசகர் கூறியிருந்தார். மேலும், ஏற்கனவே ‘குற்றவாளி’ என்று மக்கள் குறிப்பிடுவதால் ஊடகங்களிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு ரியா நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். விசாரணையில் தான் ஒரு பலிகடாவாக மாறிவிடக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில், சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.