மெர்சல் திரைப்படத்தில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தயாராகவே உள்ளதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து, தவறான தகவல்களுடன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மெர்சல் திரைப்பட சர்ச்சை தொடர்பாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், எதைப்பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் காட்சிகளை தேவைப்பட்டால் நீக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “வெளியான சில நாட்களிலேயே படம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருப்பது மன வேதனை அளிக்கிறது. மெர்சல் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் திரைப்படமும் அல்ல. சாமானிய மனிதர்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவனின் ஒரு மருத்துவனின் கனவு தான் இந்த திரைப்படத்தின் கரு.
நல்ல பொழுதுபோக்கு சித்தரங்களை தந்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே இத்தனை ஆண்டு கால எங்களது நிறுவனத்தின் நோக்கம். எங்கள் தயாரிப்புகளால் யாரும் மன வருத்தமடைந்திருந்தால் அதை என்னுடைய சொந்த வருத்தமாகவே நான் கருதுகிறேன்.
யாரையும் புண்படுத்தும் நோக்கில் திரைப்படத்தை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர்களிடம் விளக்கம் அளித்துள்ளோம். பாஜக மூத்த தலைவர்களும் எங்களது விளக்கத்தை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்கள். பாஜக தலைவர்கள் பார்வையில் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. நேரில் சந்தித்து விளக்கம் அளித்த எங்களது நேர்மையை பாஜக தலைவர்கள் பாராட்டினார்கள். பாராட்டிய பாஜக தலைவர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.