தனியார் கல்லூரி இசை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பிரபல பாடகர் பென்னி தயாள் பாடிக் கொண்டிருந்தபோது, ட்ரோன் கேமரா ஒன்று அவர் பின்னந்தலையில் மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விஐடியில் தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் `வைப்ரன்ஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஏழாவது ‘வைப்ரன்ஸ்- 2023’ கடந்த 2-ம் தேதி துவங்கி இன்று வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, குஜராத்தி, இந்தி மற்றும் மராத்தி உள்பட பல மொழிகளில் பாடி பிரபலமான பாடகராக இருந்து வரும் பென்னி தயாள் கலந்துகொண்டு பாடி வந்தார். மேடையில் அவர் உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தபோது, அங்குமிங்கும் ட்ரோன் கேமரா அவரது தலையை சுற்றி சுற்றியே படம் பிடித்துக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாரதவிதமாக திடீரென ட்ரோன் கேமராவின் விசிறிகள் பாடகர் பென்னி தயாளின் பின்னந்தலையில் மோத, வலியால் துடித்த அவர் அப்படியே மேடையில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். இதன்பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் அதிர்ச்சியான நிலையில், பென்னி தயாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவுசெய்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கு நன்றி. முதலில் அன்று என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன். ட்ரோன் கேமாராவில் உள்ள விசிறிகள் என்னுடைய பின்னந்தலையில் வந்து மோதியது. அதனை தடுக்க முயன்ற போது என்னுடைய இரு விரல்களிலும் காயம் ஏற்பட்டது. நான் இப்போது நலம்பெற்று வருகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த சம்பவத்தின் வாயிலாக நான் 3 விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
1. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பட்டாளரிடம் ட்ரோன் கேமராக்கள் உங்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி, அந்த விதிமுறையை ஒப்பந்தத்தில் சேர்க்க சொல்லுங்கள்.
2. சான்றிதழ் பெற்ற தொழில்முறை ட்ரோன் ஆப்பரேட்டர்களை மட்டுமே, தனியார் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சரியாக கையாளத் தெரியவில்லை என்றால் ஆபத்தாகிவிடும்.
3. ட்ரோன் கேமரா ஆப்பரேட்டர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நாங்கள் வெறும் பாடகர்கள்தான்; நாங்கள் விஜய்யோ, அஜித்தோ, சல்மான் கானோ, பிரபாஸோ அல்ல.. அதனால் எங்களை நெருக்கமாக படம் பிடிக்க நினைக்காமல், மிகவும் சாதரணமாகவே எங்களை நீங்கள் படப்பிடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.