ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வந்தது தர்பார் திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
இதற்கிடையே, தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும் இதன் காரணமாக விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க அவர்கள் முயற்சி செய்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இல்லத்திற்கு சென்ற விநியோகஸ்தர்களுக்கும், முருகதாஸின் உதவி இயக்குநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், 'தார்மீக ரீதியில் நீதிகேட்க சென்ற எங்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்தில் நேர்ந்த அவமானத்திற்கான எதிர்வினைதான் இது' என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்