தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை, நடிகை ஐஸ்வர்யாராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்கு விளக்கம் அளிக்குமாறு, நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தி நடிகர் விவேக் ஓபராய், கருத்துக்கணிப்பை கிண்டலடிப்பதாக கூறி, ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டார். அதில், நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடிகர் சல்மான்கான் உள்ள புகைப்படத்தை, கருத்துக்கணிப்பு என்றும், தம்முடன் உள்ள புகைப்படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றும், கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யா ராய் உள்ள புகைப்படத்தை தேர்தல் முடிவு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விவேக் ஓபராய் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தி நடிகர், நடிகைகளும் குரல் கொடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவரை கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த விவேக் ஓபராய், தாம் தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஏற்கனவே யாரோ ஒருவர் உருவாக்கி இருந்த மீம்ஸை சுட்டிக்காட்டியே தாம் கருத்து தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த பதிவு சிறுமி மற்றும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவது போன்றது என தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித் துள்ளது. மேலும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி விவேக் ஓபராய்க்கு ஆணையம் சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.