நடிகர் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படும் விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கியது முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் பார்த்துக்கொண்டார்கள். விஸ்வாசம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு செய்தியை தேடிப்பிடித்து பரபரப்பாக்கி வந்தனர். இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளார். முதலில் இளம் அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர், பின்பு அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்ததாக கூறப்பட்டது. மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து படமாக்கப்பட்டது.
இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது.
விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கண்ணை கவரும் கலர் சட்டை போட்ட, முறுக்கு மீசையுடன் இளம் அஜித் வருகிறார். அதைத்தொடர்ந்து வயதான தோற்றத்துடன், முரட்டு மீசை கொண்ட அஜித் அதிரடி காட்டுகிறார்.
இந்த போஸ்டர் வெளியாகி சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. ட்விட்டரில் சென்னை அளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் முதல் 3 இடங்களில் ‘விஸ்வாசம்’ அதே நேரம் 4 மற்றும் 5ஆம் இடங்களில் விஜய் நடிக்கும் 63வது படம் ட்ரெண்டாகியுள்ளது. இதன்மூலம் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் அஜித் மற்றும் விஜயின் ராஜ்ஜியம் நடக்கிறது. விஜயின் 63வது படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்ற அறிவிப்பு வெளியானதால், அதுதொடர்பாக ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.