‘லத்தி’ படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருந்த ‘வீரமே வாகை சூடும்’ படம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்‘லத்தி’படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றார்.
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பில் கலந்து கொண்ட அவர், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் பயிற்சியில், சண்டைக்காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு கை மற்றும் விரல்களில் ஹேர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு எலும்புகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார். 3 வாரம் அங்கு தங்கியிருக்கும் விஷால், எலும்பு முறிவுக்கான சிகிச்சையை தொடர உள்ளார். எலும்பு முறிவு சரியானப் பிறகு, மீண்டும் ‘லத்தி’ படப்பிடிப்பில் மார்ச் முதல் வாரம் முதல் பங்கேற்கிறார். மார்ச் முதல் வாரத்தில் ‘லத்தி’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. விஷாலின் 32-வது படமான இதில் சுனைனான கதாநாயகியாக நடிக்கிறார். நந்தா மற்றும் ரமணா ஆகியோர் கூட்டாக தயாரித்து வருகின்றனர். சண்டைக் காட்சியின்போது ஏற்பட்ட எலும்பு முறிவு வீடியோவை, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.