லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம் அளித்தார்.
விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. இதனை விஷாலுக்கு பதிலாக லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் செலுத்திய நிலையில், லைகாவிற்கு அத்தொகையை விஷால் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து லைகா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தொடர்ந்து 2வது நாளாக விஷாலிடம், லைகா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், விஷாலிடம் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு சாட்சி கூண்டில் நின்றவாறு இரண்டரை மணி நேரம் அவர் பதிலளித்துள்ளார்.
குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கு வழக்கறிஞர்களின் வாதத்திற்காக, அடுத்த மாதம் 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.