கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டாரா விஷால்? சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்!

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டாரா விஷால்? சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்!
கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டாரா விஷால்? சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்!
Published on

’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். தமன்னா, ஸ்ரேயா, ஹீரோயின்களாக நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்தப்படம் சரியாக ஓடவில்லை. 

இதையடுத்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது பரபரப்பு புகார் கூறினார். அதில், சரியான நேரத்துக்கு வந்து சிம்பு நடித்துக் கொடுக் காததால் பட்ஜெட் அதிகமானது என்றும் இதனால் ஏற்பட்ட பல கோடி நஷ்டத்தை சிம்பு ஈடுகட்ட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியும் புகார் கூறியிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர் விளக்கம் அளிக்கவில்லை. அவர் சார்பில் அவர் அம்மா விளக்கம் கொடுத்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதை தயாரிப்பாளர் சங்கம் ஏற்காததால், சிம்புவுக்குத் தயாரிப்பாளர் சங்கம் தடைவிதிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.  

(மைக்கேல் ராயப்பன்)

அந்த படத்தின் பிரச்னையை முடித்துவிட்டுதான் மற்ற படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர், சுந்தர். சி இயக்கியுள்ள, ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் பட வெளியீட்டில் தயாரிப்பாளர் சங்கம் தலையிடலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்த படத்தில் நடிக்க தனக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், 1 கோடியே 51 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்த நிலையில், விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும்  தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாகவும் இதனால் மைக்கேல் ராயப்பனிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடும் கேட்டிருந்தார்.

(விழா ஒன்றில் சிம்புவும் விஷாலும்...)

இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக சிம்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், புதிய படங்களில் தான் ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண் டும் எனவும் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக, ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com