சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், அதுவே அவருக்கு பிரச்சனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம்தான் கடைசியாக வெளியானது. தற்போது சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணி கதையில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க தமன் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தலைப்பும் வெளியானது. ஈஸ்வரன் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில்,மெலிந்த உடம்புடன் சிம்பு கழுத்தில் பாம்புடன் இருக்கும் போஸ்டர் ட்ரெண்டிங் ஆனது. வசனக்காட்சிகள் முழுக்க படமாக்கிவிட்ட நிலையில், தற்போது பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படத்திற்காக சிம்பு 25 நாட்கள் ஒதுக்கியிருந்தார். ஆனால்,22 நாட்களிலேயே தனது காட்சியமைப்புகளை முடித்துக்கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தில் சிம்பு காட்டில் பாம்பு பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில், மரத்தில் இருக்கும் பாம்பை லுங்கியுடன் இருக்கும் சிம்பு துணிச்சலுடன் அலேக்காக கைகளால் தூக்கி அருகில் பிடித்திருப்பவரின் சாக்கில் போடுகிறார்.
பார்க்கும்போதே பயத்தில் சிலிர்க்கவைக்கும் இந்த வீடியோவை பார்த்து சென்னையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ஒருவர் ஈஸ்வரன் படக்குழு மீது வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது வனவிலங்குச் சட்டத்தின் மீறலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.