வித்யாசம், விசித்திரம், தத்துவார்த்தம் ‘விநோதய சித்தம்’ - திரை விமர்சனம்...!

வித்யாசம், விசித்திரம், தத்துவார்த்தம் ‘விநோதய சித்தம்’ - திரை விமர்சனம்...!
வித்யாசம், விசித்திரம், தத்துவார்த்தம் ‘விநோதய சித்தம்’ - திரை விமர்சனம்...!
Published on

இன்றைய காலக்கட்டத்தில் பல விதவிதமான சினிமாக்கள் வரத் துவங்கிவிட்டன ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில் நிறைய பரீட்சார்த்தமான முயற்சிகள் திரைத்துறையில் நடக்கின்றன. அப்படியொரு வித்யாசமான சினிமாதான் ‘விநோதய சித்தம்’.

சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இந்த சினிமா Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாழ்வில் அனைத்தும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் தம்பி ராமையாவிற்கு மனைவி மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருக்கும் அவர் காரில் பயணம் செல்லும் போது அவரது வாழ்க்கையினையே புரட்டிப் போடும் ஒரு சம்பவம் நடக்கிறது. இங்குதான் சமுத்திரக்கனியின் வருகை நிகழ்கிறது. தன்னை காலம் என அறிமுகபடுத்திக் கொள்ளும் சமுத்திரக்கனி பிறகு தம்பிராமையாவுடன் பயணிக்கும் நாள்களின் வித்யாசமான காட்சிகளின் தொகுப்பே ‘விநோதய சித்தம்’.

‘தான் இல்லாட்டி என் குடும்பமே ரோட்ல நிக்கும்.’ என நினைக்கும் பல சராசரி குடும்பத் தலைவர்வர்களுக்கு இந்த சினிமாவில் நல்ல மெசேஜ் இருக்கிறது. உண்மையில் தனிமனித வாழ்வை வேறொரு கோணத்தில் விவாதித்திருக்கிறது இந்த சினிமா. சமுத்திரக்கனி இயக்கிய சினிமாக்களில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்திருக்கிறது.

தன் மொத்த பலத்தையும் கொண்டு இந்த சினிமாவை அருமையாக உயர்த்திப் பிடித்திருக்கிறார் தம்பிராமையா. மிக அருமையான நடிப்பு. இந்த கதாபாத்திர வடிவமைப்பு கூட நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது. முழு அதிகாரமும் ஆணவும் கொண்ட அப்பாவாகவும் இல்லாமல், அன்பு, பாசம் சராசரி அப்பாவாகவும் இல்லாமல் மிகப் பொறுப்பாக தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சதா சிந்திக்கும் கதாபாத்திரமாக தம்பிராமையா வருகிறார். அவரது வாழ்வில் கொஞ்சம் பின்னே சென்று காலத்தில் அவர் செய்த சில தவறுகளையும் அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டி பல திறப்புகளைத் தருகிறார் சமுத்திரக்கனி. இந்த காட்சிகள் புதுமையாக உள்ளன. இப்படத்திற்கு மிக முக்கிய பலம் வசனம். அதனை ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகியோர் இணைந்து சிறப்பாக எழுதியிருக்கின்றனர்.

க்ளைமேக்ஸில் சொர்க்கம் நரகம் குறித்த வசனங்கள் வருகின்றன. தம்பிராமையா கேட்கிறார். “ஏம்பா சொர்க்கம் எப்டி இருக்கும்...? அங்க என்ன மொழி பேசுவாங்க.?” அதற்கு சமுத்திரக்கனியின் பதில் “சொர்க்கத்தில் மொழி, சாதி, மதம்னு எதுவும் இல்லை”. பிறகு தம்பி ரமையா கேட்கிறார் “ஆமா நரகம் எப்டி இருக்கும்...?” அதற்கு சமுத்திரக்கனியின் பதில் “அங்க இருந்துதான் உங்கள கூட்டிகிட்டுப் போறேன்”. இத்தோடு படம் நிறைவடைகிறது. மிக அருமையான டச் இந்த இடத்தில் அப்படியே சினிமாவை முடித்திருக்கலாம். எண்ட் கார்டில் நீளும் அடுத்த காட்சி இந்த வசனத்தின் அடர்த்தியை நீர்த்துப் போக செய்கிறது.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, சி.சத்யாவின் இசை என எல்லாமே இந்த சினிமாவிற்கு நன்றாக அமைந்திருக்கிறது. புதுமையான சினிமாக்கள் தத்துவார்த்த சினிமா ரசிகர்களுக்கு ‘விநோதய சித்தம்’ பிடிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com