வினாயக் தாமோதர் சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு, இந்தியில் 'ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் சினிமாவாக தயாராக இருக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் எனப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கர். இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று சாவர்க்கரின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, இந்த பயோபிக் படத்தை மகேஷ் மஞ்சரேகர் என்பவர் இயக்க இருக்கிறார். படத்தின் முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர்' என்று படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் சிங் மற்றும் அமித் பி.வாத்வானி என்பவர்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்திருது பேசியிருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சிங், ``எந்த அளவுக்கு போற்றப்படுகிறாரோ அந்த அளவுக்கு விமர்சிக்கப்படுபவர் வீர் சாவர்க்கர். அவர் தொடர்பாக பல வித்தியாசமான கருத்துகள் உலா வருகின்றன. அவரை குறித்து முழுமையாக யாருக்கும் தெரியாததே அதற்குக் காரணம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கருக்கு முக்கியமான பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தப் படத்தின் மூலம் அவரின் உண்மையான வாழ்க்கை மற்றும் பயணம் தொடர்பான கண்ணோட்டத்தை இந்தப் படத்தின் மூலம் தர நாங்கள் முயல்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றோர் தயாரிப்பாளர் அமித் பி.வாத்வானி கூறுகையில், "ஒரு சுதந்திர போராட்ட வீரரின் பணியை சிறப்பிக்கும் ஒரு திரைப்படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய வரலாற்றில் வீர் சாவர்க்கர் ஒரு முக்கிய அங்கம் என்று சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல், ``வீர் சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் காலங்களால் நான் என்றென்றும் ஈர்க்கப்பட்டேன். அவர் வரலாற்றில் தனக்கு உரிய தகுதியைப் பெறாத ஒரு மனிதர் என்று நான் நம்புகிறேன். அவரின் வாழ்க்கை மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதுடன், பலரை பாதித்திருக்க வேண்டிய வாழ்க்கையை அது சுட்டிக்காட்டுகிறது. ஓர் இயக்குனராக, இது ஒரு சவாலாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதை எடுக்க விரும்புகிறேன்" என்று படத்தின் இயக்குநர் மகேஷ் வி.மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.
லண்டன், அந்தமான் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.