‘கோப்ரா’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு -விக்ரம் கலந்துகொள்கிறாரா?
விக்ரமின் ‘கோப்ரா’ பட இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ளப் படம் 'கோப்ரா'. ‘மகான்’ படத்தை தொடர்ந்து விக்ரம் இந்தப் படத்தில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விக்ரமுடன் ‘கேஜிஎஃப்’ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கனிகா, மியா ஜார்ஜ், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இது ஒரு ஸ்ட்ராங்கான சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ‘மாஸ்டர்’, ‘மகான்’ படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கான புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், நேற்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் உடல்நலக்குறைவால் கலந்துகொள்ளவில்லை. இதனால் ‘கோப்ரா’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், ‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் வருகிற 11-ம் தேதி, மாலை 7 மணிக்கு இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான், உதயநிதி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசையும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.