தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அந்த களத்தில் இருந்து அரசியல் களத்தில் குதித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோட்' படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆன அடுத்த ஒரு சில நாட்களில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார் விஜய்.
மாநாட்டிற்கு முன்பாக கொடியை அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்ட அவர், வரும் 22ம் தேதி பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி அறிமுகப்படுத்த இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் அணி தலைவர்கள் என மொத்தமாக 250 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொடியை அறிமுகம் செய்ய உள்ள விஜய், 5 நிமிடங்களுக்கு உரையாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது மாநாடு தேதியை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, இன்றைய தினம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது. ஆனால், அந்தக் கொடிதான் அதிகாரப்பூர்வ கொடி என தெரிவிக்கப்படவில்லை. ஆனால், விஜய் கொடி ஏற்றிவிட்டு காரில் செல்லும் வீடியோல் ஒன்று வெளியாகி வைரலாக சுற்றி வருகிறது.
அறிமுகப்படுத்த இருக்கும் கட்சியின் ஒரிஜினல் கொடி இரு வண்ணங்களில் இருக்கும், அதற்கு இடையில் வெற்றியின் சின்னமான வாகை மலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையேதான், கொடி அறிமுக விழாவில் அதற்கென பிரத்யேக பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்த பாடலை ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட பாடல்களை எழுதிய விவேக் எழுதியுள்ளதாகவும், விஜய்யின் Fan boy தமன் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் ஆகஸ்ட் 22ம் பெரிய Treat காத்திருப்பதாக சிலாகிக்கின்றனர் தவெக தொண்டர்கள்.