தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி கட்சி துவங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். உச்சநட்சத்திரமாக இருக்கும்போதே, திரைத்துறையில் இருந்து முழு நேர அரசியலுக்கு வருவதற்கு தனி துணிவு வேண்டும் என்று பலரும் சிலாகித்தனர்.
தான் ஒப்புக்கொண்ட படங்களின் வேலைகளை முடித்துவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார் விஜய். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு அடுத்த ஒரு சில நாட்களில் ஒட்டுமொத்த அரசியல் களமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார் விஜய்.
இதுதொடர்பான வேலைகளில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சி, மதுரை அல்லது சேலம் மாநாட்டிற்கு இடம் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான், 3 வகையான கட்சி கொடிகளை உருவாக்கிய நிர்வாகிகள் அதனை விஜய்யிடம் கொண்டு சென்றுள்ளதாகவும், அதில் தலைவர் விஜய் தேர்வு செய்வதே தவெகவின் கொடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, 2 வண்ணங்களில் உருவாகும் கொடிக்கு இடையில், ஒரு மலர் இடம்பெற இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பண்டைய காலங்களில் போரில் வெற்றி பெறும் அரசர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டது..
வெற்றியின் சின்னமாகவே இந்த மலர் பார்க்கப்படுகிறது. அதன்படியே, ‘வெற்றிவாகை சூடினார்’ என்ற கூற்று இன்றளவும் தொடர்கிறது. அதேபோல், விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையில் கட்சி பெயரில் வெற்றி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆக, இரண்டு வண்ண கொடியின் மத்தியில் வாகை மலர் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற இருக்கும் முதல் மாநாட்டில் கட்சி கொடி, கொள்கை போன்ற அறிவிப்புகள் வரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கட்சியின் செயல்பாடுகள் குறித்து முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘கோட் படம் வெளியான பிறகு தொடர்ச்சியாக கட்சி குறித்த முக்கிய அப்டேட்டுகள் வெளிவந்தபடி இருக்கும். படம் வெளியான கையோடு மாநாடும் நடக்கும். மற்ற அனைத்து தகவல்களையும் கட்சி தலைமையும், பொதுச்செயலாளரும் வெளியிடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.