உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என நடிகர் விஜய் தெரிவித்தார்.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், “ என்னுடைய சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது ஏற்படும் சந்தோஷம், அதற்கு காரணமான உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது. ஒரு விரல் புரட்சி பாடல் ஒட்டுமொத்த மக்களின் அடையாளம். இந்தப்படத்துல ரஹ்மான் சார் கிடைச்சது சர்காருக்கு ஆஸ்கார் கிடைச்ச மாதிரி. என் கூட சேரும்போதெல்லாம் வெற்றிப்படம் கொடுக்குற முருகதாஸ் சாருக்கு நன்றி. விவேக் எங்களுடன் இணைந்து பாடல் எழுதும்போது தானாக ஒரு மேஜிக் நிகழ்கிறது. யோகி பாபுவின் அசுர வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. நான் வளர்ச்சி என சொன்னது அவரது முடியை அல்ல, கெரியரை.
வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால், நாம் வெற்றியடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது? அதுதான் இயற்கைன்னு விட்டுவிட வேண்டியதுதான். உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்
மெர்சல் படத்துல அரசியல் கொஞ்சம் இருந்துச்சு. ஆனா இதுல அரசியல மெர்சல் பண்ணிருக்கோம். எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாங்கள் ‘சர்கார்’ அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம். (ரசிகர்களின் ஆராவாரத்தைத் தொடர்ந்து படத்தை சொன்னேன் என்றார் விஜய்) நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். ஒருவேளை உண்மையில் முதல்வரானால், லஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அதனை செய்வேன். ஆனால், அதனை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவிற்கு நாம் பழகிவிட்டோம்.
ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் எல்லோரும் சரியாக இருந்தால், எல்லோரும் சரியாக இருப்பார்கள். பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்கக்கூட காசு கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்றுமட்டும் உறுதி. தர்மம்தான் ஜெயிக்கும், நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் தாமதாக ஜெயிக்கும். அடிப்பட்டு வருபவன் ஒருநாள் தலைவன் ஆவான். அப்போதுதான் நடக்கும் உண்மையான சர்கார்.” எனத் தெரிவித்தார்.