விஜய்சேதுபதியின் ‘96’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
விஜய்சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘96’. இதில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இதனை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று காலை வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் டீசரை நேற்று மாலை விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் ‘96’பட போஸ்டரில் த்ரிஷாவும் விஜய்சேதுபதியும் இணைந்து பயணிப்பதைபோல காட்சி இடம் பெற்றிருந்தது. மேலும் படத்தின் தலைப்பான ‘96’ என்ற எழுத்தை உற்றுக் கவனித்தால் அதன் உள்ளே பல ரகசியங்கள் பொதிந்துள்ளன. அந்த எழுத்திற்குள் 1996 ஆண்டு காலகட்டத்தை பிரதிபளிக்கும் வகையில் கோலிசோடா, 20 பைசா, 5 பைசா நாணயம், மைகேல் ஜாக்சன், திண்டுக்கல் பூட்டு சாவி, கேசட், பிரில் இங்க் பாட்டில், தூர்தர்ஷன் சானலில் வரும் லோகோ, சைக்கிள், அரிக்கன் விளக்கு, ஐஸ் வண்டி, பம்பரம், பட்டம், பட்டாம்பூச்சி, சிலேட், பூதக்கண்ணாடி, டிஃபன் கேரியர், இளையராஜா என பல விஷயங்கள் தென்படுகின்றன. அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை குறிப்பதால் படத்தின் கதையும் அதை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.