தெலுங்கு சினிமாவில் கொரோனா சூழலில் வெளியான படங்களில் 100 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற பெருமையை விஜய் சேதுபதி நடித்த ’உப்பெனா’ பெற்றிருக்கிறது.
கொரோனா சூழலில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்களில் 100 கோடியை தொட்ட முதல் படம் என்ற பெருமையை விஜய் சேதுபதியின் ‘உப்பெனா’ பெற்றிருக்கிறது. அறிமுக இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி வெளியான ‘உப்பெனா’ சூப்பர் ஹிட் அடித்தது. கொரோனா அச்சத்தால் தியேட்டர்களுக்கு வர விரும்பாத ரசிகர்களையும் ’உப்பெனா’ வரவைத்தது. மீனவ கிராம இளைஞருக்கும் ஜமீன் வீட்டுப் பெண்ணுக்கும் இடையேயான காதலை மீனவ கிராம கதைக்களத்தில் வித்தியாசமாகச் சொல்லி கவனம் ஈர்த்தார் புச்சி பாபு சனா.
ஹீரோவாக சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஷ்ஷும், ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டியும் நடித்தார்கள். இவர்களின் நடிப்பைவிட பெரிதும் கவனம் ஈர்த்தது என்னவோ வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்புதான். கீர்த்தி ஷெட்டியின் அப்பாவாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா சூழலில் வெளியான படங்களிலேயே ‘உப்பெனா’ தான் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை ’உப்பெனா’ இயக்குநர் புச்சி பாபு சனா தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார். தமிழில் விஜய்யின் ‘மாஸ்டர்’ அதிகை வசூலை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.