படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரமாகியுள்ளது விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படம் ஜூங்கா. அதற்கான அதிகாரப்பூர்வான செய்தியை வெளியிட்டுள்ளது இப்படக்குழு.
தமிழில் அடுத்தடுத்த வெற்றிகளால் தனது மார்க்கெட் வேல்யூவை தக்க வைத்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான விக்ரம் வேதா பெரிய அளவுக்கு வெற்றியை ஈட்டியது. தற்சமயம் அவரது கால்ஷீட் 2020 வரை நிரம்பி உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. அவரிடம் கதை சொல்ல கூட நேரம் கிடைப்பத்திலை என பல இயக்குநர்கள் கூறி வருகிறார்கள்.
இரண்டு மணிநேரம் கதை சொல்ல வேண்டும் என இவரிடம் அனுமதி கேட்ட போது இருபது நிமிஷத்திற்குள் கூற முடியுமா என விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக இயக்குநர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அந்தளவுக்கு பரபரப்பான ஹீரோ விஜய்சேதுபதி. இந்நிலையில் அவர் நடிப்பதாக முடிவான ஜூங்கா படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அந்தப் படத்தின் வியாபாரம் முடிவடைந்துள்ளது. இதை ஏ அண்ட் பி வெளியீட்டு நிறுவனம் வாங்கியுள்ளது.
இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ஜுங்காவின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. அதற்குள் படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. இது விஜய்சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் என்று தெரிவித்துள்ளனர்.
இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கியவர்.