'மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
பொங்கலையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. இதனால், பாடலைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். படம் வெளியானபிறகு, கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். படம் வெளியானதிலிருந்து இப்போதுவரை உலகம் முழுக்க ரசிகர்களும் பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இப்பாடல் ஹிட்டாலேயே அனிருத் விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைப்பாளராக தெலுங்கில் அறிமுகமாகிறார் என்று சொல்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். இந்த நிலையில், ’வாத்தி கம்மிங்’ பாடல் வெளியான 10 மாதத்திலேயே யூடியூபில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தனுஷின் 'ரெளடி பேபி' பாடலும் தெருக்குரல் அறிவு - தீயின் இன்டிபெண்டன்ட் பாடலான 'எஞ்சாய் என்சாமி' பாடலும் தென்னிந்தியாவில் அதிக பார்வைகள் கடந்த பாடல்களில் அடுத்தடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. அதற்கடுத்ததாக, விஜய்யின் 'வாத்தி கம்மிங்' பாடல் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 'ரெளடி பேபி' 1 பில்லியனுக்கு மேலான பார்வைகளையும், 'எஞ்சாய் என்சாமி' 371 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.