விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் நீண்ட இழுப்பறிக்கு பிறகு தெலுங்கு மொழியில் 'அதிரிந்தி' என்ற பெயரில் இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் 'மெர்சல்' திரைப்படம் வெளியானபோது ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இருப்பினும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் தமிழில் 200 கோடி ரூபாய்க்கு மேல் 'மெர்சல்' வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் வெளியான மெர்சலில் ஜிஎஸ்டி வசனம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், தெலுங்கு மொழியிலும் இதற்கு தணிக்கை சான்றிதழ் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தெலுங்கு மொழியில் குறிப்பிட்ட அந்த வசனங்களை நீக்கி, தற்போது தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அதிரிந்தி' திரைப்படம் வெளியாகிறது. இதனிடையே ஆந்திராவிலும் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.