‘மாஸ்டர்’ படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 வெளியாகும் என்று படக் குழுவைச் சேர்ந்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ்த் திரையுலமே முடங்கிப் போயுள்ளது. கொரோனா வைரஸ் அத்தனை வேலைகளையும் முடக்கிப் போட்டுள்ளது. மார்ச் 31 வரை திரையரங்கள் முழுவதும் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இந்த மாதம் 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் வெளியாக இருந்த படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொரோனா சுழலில் விஜயின் ‘மாஸ்டர்’ படமும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆகிய இரண்டு படங்களும் சிக்கிக் கொண்டுள்ளன. பெரிய வசூலை நம்பி கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப் பின்னடைவு நேர்ந்துள்ளது. முன்பு வெளியான தகவலின் படி விஜயின் ‘மாஸ்டர்’ அடுத்த மாதம் 9 தேதி வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வலைத்தளத்திற்கு ‘மாஸ்டர்’ படக்குழுவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இப்படம் வெளியாவது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாக தன்னை யார் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. அவர், படம் வெளியாவது பற்றி பேசுகையில்,
“தற்போது வேலை நிறுத்தம் மார்ச் 31 வரை இருக்கிறது. அதற்குள் இந்த நிலைமை மேம்பட்டு விடும் என்று நம்புகிறோம். தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால், பெரிய படமான இதனை வெளியிடுவதற்கான சரியான நேரமாக இதுவே இருக்கும் என்றும் நினைக்கிறோம். எனவே, ஏப்ரல் 9 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.