எனது கட்சியில் விஜயின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என சொல்லியுள்ளார், அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
பிகைன்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில் “என் பிள்ளை நன்றாக வரவேண்டும் என்பதற்காக, அவரை கேட்காமலேயே 1993 இல் அவருக்கான ரசிகர்மன்றத்தை நான் தான் ஆரம்பித்தேன். இன்று அவர் உச்சநட்சத்திரம் ஆகிவிட்டார் என்பதற்காக அவர் என் பிள்ளை இல்லையா?. அவரை அப்போது நினைத்ததுபோலவே இப்போது குழந்தையாகவே நினைக்கிறேன், எனவே அவருக்கு எது நல்லதோ அதையே இப்போதும் செய்துள்ளேன். நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் அவருக்கு நல்லது என நினைத்தே இதை செய்துள்ளேன்.
இந்த அரசியல் கட்சியை ஆரம்பித்தபோது அவரிடம் கேட்காமலேயேதான் ஆரம்பித்தேன், ஆனால் அப்பா செய்தது நல்ல விசயம்தான் என்பது கொஞ்சநாள் கழித்து விஜய்க்கு புரியும் என நம்புகிறேன். தனது ரசிகர்களை நான் ஆரம்பித்த கட்சியில் சேரவேண்டாம் என சொல்லி இருக்கிறார், ஆனால் அப்பா நல்லதுதான் செய்துள்ளார் என புரிய கொஞ்சகாலம் பொறுத்திருப்போம். நான் விஜயுடன் எப்போதாவது, மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் பேசுவேன், இப்போது நான் அவரிடம் பேசுவது சரியாக இருக்காது, கொஞ்சநாள் பொறுத்துதான் பேசுவேன். எனது கட்சியில் விஜயின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என சொல்லியுள்ளார், அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும், அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறுதானே.
இதனை நான் சுணக்கமாக நினைத்ததே இல்லை, நான் எது ஆரம்பித்தும் இதுவரை தோற்றதே இல்லை. நல்லது நினைப்பவர்கள் மத்தியில் கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன், என் கடவுளே விஜய்தான். ”பத்து ஆண்டுகளுக்கு முன்பே நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன், உனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று நீ சொல்லிவிடு என விஜயிடம் சொல்லியுள்ளேன்”. இதனை ஒரு சர்ச்சையாகவோ, பிரச்னையாகவோ நினைக்கவில்லை. விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு, அதனை மக்கள் இயக்கமாக மாற்றியபோது நிறுவனராக இருந்ததும் நான்தான், அது என்னுடைய அமைப்பு அதனை இப்போது அரசியல் கட்சியாக நான் மாற்றியுள்ளேன்.
1993 முதல் சமூக சேவை செய்த ரசிகர்களை ஊக்கப்படுத்தவே இந்த அரசியல் கட்சி. ஒவ்வொரு ஊரிலும் நல்லது செய்ய பத்துபேர் வேண்டும், அதற்காகவே இந்த அரசியல் கட்சி, மற்றபடி 2021 தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தற்போது இல்லை. இப்போதைய சர்ச்சையை பற்றி கவலை இல்லை, விரைவில் விஜய் என்னுடைய நல்ல எண்ணத்தை புரிந்துகொள்வார், அப்போது விஜய் ரசிகர்களும் இந்த கட்சியில் சேருவார்கள்.
என் மனைவி ஷோபாவுக்கு இந்த அரசியல் கட்சியில் விருப்பமில்லை என்றால் விலகிக்கொள்ளட்டும், நான் வேறு பொறுப்பாளரை போடுவேன். எந்த குடும்பத்தில்தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது, பிரச்சனை இல்லை என்றால் அது குடும்பமே இல்லை. எல்லா அப்பா-மகனைப்போலவும் எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டைவரும், பேசாமல் இருப்போம் இது சாதாரணமானதுதான்.
விஜயிடம் தெரியாத ரகசியம் நடந்துகொண்டுள்ளது, அதுவிரைவில் உடையும்போது விஜய்க்கு எல்லா உண்மையும் புரியும், அப்போதுதான் விஜய்க்கு நான் செய்த நல்லது புரியும். நான் விஜய்க்காகவே வாழ்ந்து வருகிறேன், அவரை நல்ல நடிகனாக வளர்க்க என் தொழிலையே விட்டுவிட்டு விஜய்க்காக கூலிக்காரன்போல பியூன்வேலை பார்த்துள்ளேன். எனக்கும் விஜய்க்கும் உள்ள உறவை உடைக்கவே பலரும் முயற்சி செய்கிறார்கள்.
நான் நல்லவன் எனவே விஜயிடம் நல்லவன்போல நடிக்க தேவையில்லை, ஆனால் வில்லன்கள் அவரிடம் நல்லவன்போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய் என்னைவிடவும் புத்திசாலி, அவர் விரைவில் கண்டுபிடித்துவிடுவார். விஜய் ஒரு சிறிய “விஷ வளைய”த்தில் சிக்கியுள்ளார், அதிலிருந்து நான் அவரை வெளியில் எடுக்க வேண்டும். இதனை நான் சுணக்கமாக பார்க்கவில்லை, இதை ஒரு பாசிட்டிவான விசயமாகவே எடுத்துக்கொள்கிறேன். என் பிள்ளையை காப்பாற்றவேண்டும், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்