கள்ளக்குறிச்சி அருகே விஜய் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவாட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் முடித்து விட்டு 4 ஆண்டுகளாக சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் கடந்த 4 மாதங்களாக வேலையின்றி சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார். இதனால் பாலமுருகன் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு தியாகதுருகத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்த பாலமுருகன் அறையின் கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது “எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வேலை இல்லாமல் இருந்ததால் விரக்தியில் இருந்தார். செல்போனில் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்” எனத் தெரிவித்தனர்.
அவரது மறைவுச் செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் பல்வேறு மாவட்டஙகளிலிருந்தும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இறப்பதற்கு முன்னதாக தன்னுடைய நிலையை தனது நிலையை அவ்வபோது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பாலமுருகன்.
அதில், “நான் செத்துட்டா டேக் லாம் போடுறனு அனைக்கி சொன்னீங்கல்ல ரெடியா இருங்க. தலைவன் படம் பாக்கமலே போறன். தலைவனையும். லவ் யூ தலைவா.. என்னையும் மதிச்சி இவ்ளோ நாள் சப்போர்ட் பண்ணுன உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இங்க நெறய மாம்ஸ், மச்சான்ஸ், நண்பர்கள்னு கெடைச்சாங்க இங்க கொஞ்சம் நாள் சந்தோஷமா இருந்தன் அது போதும் எப்பவும் என்னோட லவ் உங்க எல்லாருக்கும் இருக்கும். நீங்க நெனைக்கிற மாறி லவ் failiure எனக்கு இல்லை. வீட்ல பிரச்னை. அதான்...” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது #RIPBala விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வல்ல. எனவே தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ளவும்..
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)