தெலுஞ்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, எல்லா வருடமும் கிறுஸ்துமஸ் - புத்தாண்டு - மகர சங்கராந்தி என தொடர்ந்து வரும் பண்டிகை காலத்தில், அவருடைய ரசிகர்களுக்கு நன்றி கூரும் விதமாக ஏதேனும் ஆச்சர்யங்களை #Devarasanta என்ற பெயரில் செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த வருடம் அவருடைய 100 ரசிகர்களுக்கு சுற்றுப்பயணத்தின் முழு செலவும் தானே ஏற்றுக்கொள்ளுவதாக கூறியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
இதுபற்றி அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் `எங்கே சுற்றுப்பயனத்தை மேற்கொள்ளலாம் என்று சொல்லுங்கள் நண்பர்களே’ என வாக்கெடுப்பு கேட்டுள்ளார். அதில் அவர் 4 ஆப்ஷன்கள் கொடுத்திருந்தார். அவை - இந்தியாவின் மலைப் பகுதி, இந்தியாவின் கடற்கரை, இந்தியாவின் கலாச்சார பயணம், இந்தியாவின் பாலைவனம் ஆகியவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும்படி அவர் கேட்டிருந்தார்.
மேலும், “#Devarasanta, 5வருட காலமாக நான் செய்து வரும் ஒரு வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஒரு சிறந்த விஷயத்தை யோசித்துள்ளேன். அதன்படி நான் எனது 100 ரசிகர்களை எனது செலவில் சுற்றுப் பயணம் அனுப்பலாம் என்று இருக்கிறேன். எந்த இடத்தை தேர்வு செய்யலாம் என்று எனக்கு உதவுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு ஏராளமான ட்விட்டர் பயனாளிகள் அவர்களின் ஆர்வத்தை விருப்பமாகத் தெரிவித்துள்ளனர். 31 ஆயிரத்துக்கும் மேலான ட்விட்டர் பயனாளிகள் அந்த வாக்குப்பதிவிற்கு வாக்களித்துள்ளனர். அதில் இந்தியாவின் மலைப் பகுதிக்கு 42.5 சதவீதமும், இந்திய பாலைவனத்துக்கு 6.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதில் ஒருவர் “இது தான் கிறிஸ்துமஸின் சிறந்த பரிசு... நன்றி அண்ணா” என்று பதிவிட்டுள்ளார். மற்றோருவர் “நீங்கள் தான் சிறந்த மனிதன்... நாங்கள் உங்களை ரசிக்க காரணம், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் அன்பை பகிர்கின்றீர்கள்! அது தான் முக்கியம்” என்றுள்ளார்.
ஒருவர் “சிறப்பு சிறப்பு... நான் எப்படி அதில் 100ஆவது ஆளாக முடியும்” என்றுள்ளார். மேலுமொருவர் “இது ஒரு சிறந்த யோசனை! இது ஒரு கலாச்சார பயணமாக இருந்தால் யுபிஎஸ்சி படிப்போருக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவிற்கு 3,800 லைக்குகள் கிடைத்த நிலையில், இதை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பார்வையிட்டுள்ளனர்.
- ஷர்நிதா