’என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான்’ என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
இந்திய சினிமா நடிகர்கள் கலந்து கொண்ட சினிமா ரவுண்ட்டேபிள் பேட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பாட், பார்வதி மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்டனர். தங்களுக்குள்ளான சினிமா புரிதல் குறித்தும் சினிமாவின் தற்போதைய நிலை குறித்தும் கருத்துகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதில் பேசிய மலையாள நடிகை பார்வதி, அர்ஜூன் ரெட்டி மற்றும் ஆங்கில 'ஜோக்கர்' படங்கள் பற்றி பேசினார். அதில் ’அர்ஜூன் ரெட்டி’ படம் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்தார். பெண் வெறுப்பை கொண்டாடும் படமாக, அர்ஜுன் ரெட்டி இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆங்கிலப்படமான ஜோக்கர் திரைப்படத்தில் நடிகர் பல கொலைகளை செய்தாலும் அந்த கதாபாத்திரத்தை பின் தொடர வேண்டுமென்றோ, பாராட்ட வேண்டுமென்றோ தோன்றவில்லை. அதே வேளையில் அர்ஜூன் ரெட்டியில், காதலர்களிடையே கன்னத்தில் அறைந்துகொள்வதை காட்டுகிறார்கள். அதற்கு யூ டியூப்பில் சென்று பார்த்தால் மக்கள் கும்பல் மனப்பான்மையில் ஆதரவாக கமென்ட் செய்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுகிறீர்கள் என்று தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டா முன்பே, பார்வதி இப்படி தைரியமாக பேசியது இணையத்தில் ஹிட் ஆனது. இணையவாசிகள் பலரும் பார்வதிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்தும் அந்தப் படத்தை கடுமையாகத் திட்டியும் விமர்சித்தும் வந்தனர்.
இதனால் கடுப்பான விஜய தேவரகொண்டா, ’இனியும் அமைதியாக இருக்க முடியாது. இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மனதுக்குள்ளேயே வைத்திருந்தால் அது கட்டியாக மாறிவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’’நடிகை பார்வதியை எனக்குப் பிடிக்கும். அவரது நடிப்பை மதிக்கிறேன். அவரது கேள்வி பற்றி எனக்கு கவலையில்லை. அதை நான் புரிந்துகொள்கிறேன். படம் பற்றிய சந்தேகத்தின் பலனை மக்களிடம் விட்டுவிடுகிறேன். அவரின் கேள்விகளுக்குப் பின்னால் உண்மையான கோபமும் நோக்கமும் இருப்பதை உணர்கிறேன். ஆனால், என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான். என்ன பேசினோம் என்பது தெரியாமலேயே இவர்கள் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பற்றி இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. அது என் பிரச்னை. படம், பேட்டி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி எனக்கு கவலையில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.