செய்தியாளர் சாந்தகுமார்
இயக்குநர் வெற்றிமாறனின் பண்ணாட்டு திரை பண்பாட்டு ஆய்வகமும், வேல்ஸ் பல்கலைகழகமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு இலவச கல்வி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
நிகழ்வில் பேசிய ஐசரி கணேசன், “தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கை கோர்ப்பதில் மகிழ்ச்சி, திரைத்துறை தாண்டி இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிப்பது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இலவச திரை கல்வி வழங்கி வருகிறார் என்பது பாராட்டுக்குரியது. அவரது ஆய்வகத்தின் டிப்ளமோ பட்டமளிப்பு விழாவில் இதை தெரிந்து கொண்டேன். அதை இளநிலை முதுநிலை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும் என நினைத்து தற்போது இணைந்து அதை நிறைவேற்றுகிறோம்” என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நாங்கள் சினிமாவிற்குள் வந்த போது இருந்த கால சூழலும் தற்போதைய சினிமா சூழலும் மாறி உள்ளது. பொருளாதார, சமூக பின்புலம் சார்ந்து பார்க்காமல் அனைவரையும் ஏதோ வகையில் இணைத்து கொண்டு சினிமா கற்றுகொள்ள வழி இருந்தது. ஆனால் தற்போது பணம் அதிகம் செலவு செய்து சினிமா முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்றும் அனைவருக்கும் இலவச திரைக் கல்வி கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து தொடங்கினேன்.
இந்த நேரத்தில் வெற்றி துரைசாமியை நினைவு கூர்கிறேன். அவர் தான் பண்ணாட்டு திரை பண்பாடு ஆய்வகத்திற்கு இடம் கொடுத்தார். இன்று திரை என்பது சினிமா மட்டும் அல்ல யூட்யூபர், மீம் கிரியேட்டர் ஆவதும் முக்கியம் தான் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் மாணவர்களாக இருப்பார்கள்” என்றார்.
இறுதியாக கூட்டாக செய்தியாளர்கள் கேள்விக்கு இருவரும் பதிலளித்தனர். அப்போது இளைஞர் மத்தியில் போதை பழக்கம் அதிகரிப்பு குறித்து பதிலளித்த வெற்றி மாறன், “நமது வாழ்க்கை நமது கையில் என்பதை நாம் உறுதி செய்யவேண்டும். நான் அதிக அளவு சிகெரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். அதில் இருந்து மீண்டு வந்தேன். எனவே போதை பழக்கம் போன்ற அனைத்து பழக்கத்தில் இருந்தும் வெளி வர முடியும்.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் உரையாடலை தொடங்க வேண்டும், பெற்றோரும் பேசுவதுடன் இல்லாமல் அவர்கள் எந்த வித பழக்கத்திற்கும் அடிமையாக இருக்க கூடாது போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விடுதலை 2 படப்பிடிப்பு 20 நாட்களில் நிறைவடைகிறது. வரும்காலத்தில் ஐசரி கணேஷன் தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு இருக்கிறது” தெரிவித்தார்.