நாடக எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்ட, பல விருதுகளுக்கு சொந்தக்காரரான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
1938-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த கிரிஷ் கர்னாட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று கல்வி பயின்றவர். அங்கு அவர் “யாயதி” என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து எழுத்திலும், சினிமாவிலும் இருந்த ஆர்வத்தால் அத்துறையில் கால்பதித்த கிரிஷ் கர்னாட், பின்னர் சினிமா உலகில் உச்சம் தொட்டார். கன்னடம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிப்பு, இயக்கம் என சகலகலா வல்லவராக திகழ்ந்தார். சாகித்ய அகாடமி விருது, பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, ஞானப்பீடம் உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
சினிமா உலகை தாண்டி, மனதில் நினைத்ததை தைரியமாக பேசக்கூடியவர் தான் கிரிஷ் கர்னாட். அப்படித்தான் கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களூரு விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கர்நாடகா அரசால் ஏற்படுத்தப்பட்ட ‘திப்பு ஜெயந்தி’ விழாவில் இதனை வலியுறுத்தினார். கிரிஷ் கர்னாட்டின் இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, 'கெம்பே கௌடா' என்ற விஜயரங்க அரசரின் பெயரில் பெங்களூரு விமான நிலையம் உள்ளது. அந்த பெயரை மாற்றச் சொல்வதன் மூலம் தங்களது சமூகத்தையும், தங்களது மன்னரையும் கிரிஷ் கர்னாட் இழிவுபடுத்திவிட்டார் என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகாவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டைரியில், கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியல் இருந்தது. அதில் கிரிஷ் கர்னாட்டின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் “ நானும் ஒரு நகர்ப்புற நக்சல்” (Me too Urban naxal) என்ற வாசகத்துடன் அவர் பங்கேற்றது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாது. தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவரின் மறைவு அவரின் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.