’வீரமே வாகை சூடும்’ திரை விமர்சனம்: லாஜிக்கா.. அப்படினா? வாகை சூடினாரா விஷால்?

’வீரமே வாகை சூடும்’ திரை விமர்சனம்: லாஜிக்கா.. அப்படினா? வாகை சூடினாரா விஷால்?
’வீரமே வாகை சூடும்’ திரை விமர்சனம்: லாஜிக்கா.. அப்படினா? வாகை சூடினாரா விஷால்?
Published on

’வி.எஃப்.எஃப் - விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்பதை 'விஷால் ஃபைட் ஃபேக்டரி' என்று சொல்லும் அளவிற்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் அடங்கிய படமாகவே வெளியாகியிருக்கிறது ‘வீரமே வாகை சூடும்’. விஷாலே தயாரித்து நடித்துள்ளார்.

காவல்துறையில் பணியாற்றும் தனது தந்தையைப் போலவே, எஸ்.ஐ ஆக தேர்வெழுதிவிட்டுக் காத்திருக்கும் விஷால். கல்லூரிக்குச் செல்லும் இவரது தங்கை ரவீனாவை ஒன் சைடாக காதலிப்பதாக கூறிக்கொண்டு கொலைவெறியோடு திரியும் ரவுடியின் தம்பி. ஆலைக் கழிவுகளால் ஆபத்து என்று தொழிற்சாலைக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிக்கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர் இளங்கோ குமரவேலை என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் வில்லன் பாபுராஜ்.

கல்லூரி மாணவியுடன் தனது நண்பன் இருக்கும் அந்தரங்க வீடியோவை வைத்து ப்ளாக்மெயில் செய்துகொண்டிருக்கும் காவல்துறை உயரதிகாரியின் மகன் உள்ளிட்ட நண்பர்கள். இப்படி மூன்று க்ரைம் சம்பவங்களை ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு க்ளைமாக்ஸில் முடிச்சுகளை அவிழ்க்கிறார் அறிமுக இயக்குநர் து.ப சரவணன்.

வழக்கமான தனது ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய துடிப்புடன் நடித்திருக்கிறார் விஷால். அவரின் நண்பன் தளபதியாக யோகிபாபு. பாடி லாங்வேஜாலும் வசனங்களாலும் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் வசனம் எழுதும்போது ’தல தளபதி’ என்று இருவரும் அழைத்துக்கொள்வதுபோல் இயக்குநர் எழுதியிருப்பார் போல. அஜித் சமீபத்தில் தன்னை யாரும் ’தல’ என்று அழைக்கவேண்டாம் என்ற அன்புக்கட்டளைக்கு இணங்க விஷாலும் யோகிபாபுவும் ’தளபதி தளபதி’ என்றே அழைத்துக்கொள்கிறார்கள்.

வில்லன்களின் அறிமுகத்துடன் இருள் கவ்விய அந்த துவக்கக்காட்சியே த்ரில்லிங் ஆக்கிவிடுகிறது. குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தும் ’பெரிய இடத்துப் பசங்க’ளை பத்திரமாக தப்பவைத்துவிட்டு வேறு ஒருவனை ஆஜர்படுத்துவது, ’எதுக்காக அடிக்கிறீங்க?’ என்ற கேள்விக்கு விஷாலின் அப்பாவும் போலீஸுமான மாரிமுத்து “எதுக்குன்னு தெரியல. மேலதிகாரி அடிக்கச்சொன்னார். அடிக்கிறேன்” என்று அப்பாவியாக பதிலளிப்பது போன்ற காட்சிகள் காவல்நிலையங்களின் அதிகார துஷ்பிரயோகங்களை கொஞ்சம் கொஞ்சமாக படம்பிடித்து காண்பிக்க ஆரம்பிக்கிறது.

”ஒரு குற்றம் எங்கருந்து உருவாகுது தெரியுமா ? தன்னைக் காப்பாத்த ஒருத்தன் இருக்கான்னு நினைக்கும்போதுதான்’, ’வன்முறையை சகிச்சுக்கோன்னு சொல்ற அஹிம்சைவாதம்தான் இருக்கிறதுலே மிகப்பெரிய வன்முறை’, ‘எலிய துரத்துற பாம்பு ஆபத்தானதா? பாம்பு துரத்துற எலி ஆபத்தானதா? பாம்போட பசி ஒரே ஒரு எலி, எலியோட பசி ஒட்டுமொத்த வயல்’, ’கொசு, ஆட்டுக்குட்டி, நாய், நரின்னு எல்லாத்தையும் இவனுங்க கொன்னுடலாம். ஆனா, சிங்கத்தை இவனுங்களாலக் கொல்ல முடியாது’ இப்படி படம் முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகளையே ஓவர் டேக் செய்கின்றன அதிரடி வசனங்களும். குறிப்பாக, ’மீசை தாடி வச்சவன்லாம் பொறுக்கின்னு யார் சார் சொன்னது’ என்ற வசனத்திற்காகவே நிச்சயம் இயக்குநருக்கு இளைஞர்கள் மத்தியில் பாராட்டுகள் குவியும். விஷால் மூலம் இக்கேள்வியை எழுப்பி கால்வதுறையினர் மற்றும் சமூகத்தினரின் பார்வையை மாற்றிக்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் ரீதியாக பல்லிளிக்கும் தனது மேலதிகாரியை, அறையின் கதவைத் திறந்து சக ஊழியர்கள் மத்தியில் ஸ்ட்ராங்காக போட்டுடைக்கும் அறிமுகக் காட்சியிலேயே நம் இதயத்தில் ஒட்டிக்கொள்கிறார் நாயகி ட்ம்பிள் ஹயாதி. சில காட்சிகளில் வந்தாலும் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் இலியானாவை நினைவூட்டி ரசிக்க வைக்கின்றன. தென்னிந்திய சினிமாவுக்கு அடுத்த இலியானா ரெடி.

திசை திருப்பப்பட்ட தனது நெருக்கமானவர்களின் படுகொலைப் பின்னணி. இதையெல்லாம், அறிந்துகொள்ள தனி ஒரு மனிதனாக விஷாலின் ட்ரேஸ் அண்ட் சேசிங் காட்சிகள் புல்லட் வேகத்தில் சீறிப்பாய்ந்து, பின்பு திக்கு திசை தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன. ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் ரவீனா வில்லன்களால் வாட்ஸப் மூலம் செய்யும் செயல், பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் தகவல். அதேநேரத்தில், ‘லொக்கேஷனையும் ஷேர் செய்’ என்று பார்வையாளர்கள் தியேட்டரில் கத்தி கதறினாலும் விஷாலின் தங்கைக்கு காதில் விழவில்லை. எப்படி விழும்? காவலரின் மகளே ‘காவலன் ஆப்’ஐ பயன்படுத்தாமல் இருக்கிறார். ஆனாலும், ரவீனா ரவி, கவிதா பாரதி, மாரிமுத்து, ஜார்ஜ் மரியன் ஆகியோரின் நடிப்பே மனதில் நிற்கின்றன.

ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாக்களில் மார்க் ஆண்டனி, பீட்டர், கிறிஸ்டோஃபர், டானி, சகாயம் என சிறுபான்மை மக்களை வில்லன்களாகவும் அடியாட்களாகவும் மட்டுமே காண்பிக்கப்பட்டு வந்ததைத் தாண்டி ஃபைசல், பரிசுத்தம் போன்ற கதாப்பத்திரங்களை நல்லவர்களாகவும் போராடக்கூடியவர்களாகவும் காண்பிக்கும்போதே இயக்குநர் து.ப. சரவணன் நல்லிணக்க இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். அம்பேத்கர், பெரியார் படங்களும் குறியீடாய் காட்டப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டராக வரும் கவிதாபாரதி தனது வில்லத்தனமான பார்வையையும் நடிப்பையும் வெளிப்படுத்தி உற்றுநோக்க வைக்கிறார். குறிப்பாக, சாப்பிட்டுக்கொண்டே ரவுடியிடம் எதார்த்தமாக பேசும் காட்சி, இப்படத்தின் சிறந்தக் காட்சிகளில் ஒன்று. பரிசுத்தமாக நடித்த இளங்கோ குமரவேல் தனது போராட்டத்தின் மூலம் சில கள போராளிகளை நினைவுபடுத்துகிறார்.

முதல் பாதியிலேயே விஷாலின் தங்கை மாட்டிக்கொள்வது பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டு, இன்ட்ரவெல் முடிந்து டீ, காஃபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் குடித்துவிட்டு கையில் சமோசா, பாப்கார்னுடன் ரிலாக்ஸாக வந்து உட்காரும்போது, அந்த செய்தியுடன் போலீஸ்காரர் அலறித் துடித்துக்கொண்டு ஓடிவருகிறார். அப்போது, கிட்டத்தட்ட ‘வல்லவராயன் படை எடுத்து வருகிறார் மன்னா’ என்கிற 23 ஆம் புலிகேசியின் தலைமை ஒற்றனின் தகவல்போல் அமைந்துவிடுகிறது. அதேபோல், ஆரம்பத்திலேயே செல்போனை ஆராயாமல், கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நெருங்கும்போது இரண்டு கொலைகளுக்கும் கனெக்‌ஷன் இருக்கும் என்று விஷால் சீரியஸாக சொல்லும்போது, ‘இதையே இப்போதான் கண்டுபிடிக்கிறீங்களா?’ என்று எண்ண வைத்துவிடுகிறார்.

அதுவும், சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி என்று புல்லட்டிலேயே பறக்கும் விஷாலைப் பார்த்து ”விஜய், அஜித்தெல்லாம் படத்துல ஹெல்மெட் போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, நீங்க ஹைவேஸ்ல ஹெல்மெட் போடாம போறீங்களே சார்” என்ற சமூக அக்கறையுள்ள குரல்களும் நம் மனதில் எழுகின்றன. விஷாலின் ‘போரஸ்’ என்ற பெயருக்கு அவர் கொடுக்கும் விளக்கம் அசரவைக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கேற்ற வீரம் திரைக்கதையில் இல்லாமல் இரண்டாம் பாதி ‘போர்’ அடிக்கிறது.

’ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை. அந்த கொலையை மறைக்க இன்னொரு கொலை’ என்று கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படியே போனால், இந்த கொலைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையும் வில்லன் பாபுராஜ் கொலை செய்துவிடுவாரோ என்ற அச்சம் தொற்றிக்கொள்கிறது. யுவனின் பின்னணி இசையும் கவின் ராஜின் ஒளிப்பதிவும் மிரள வைக்கின்றன. ஆனால், பாடல்கள் நம் காதுகளில் ‘டல்’ அடிக்கின்றன.

தலைப்புக்கேற்றார்போல படத்தில் வெற்றி வாகை சூடுகிறவர் ஸ்டண்ட் மாஸ்டர்தான். சண்டைக்காட்சிகள் மட்டுமே படத்தில் ப்ளஸ். அதனாலேயே, லாஜிக்கை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் சண்டைக்காட்சிகளும் வசனங்களும் மேஜிக் செய்யும் என்ற நம்பிக்கையில் திரைத்துறை தோன்றியக் காலத்து அரத பழசான கமர்ஷியல் படமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர் து.ப சரவணன். வீரத்துடன் திரைக்கதையில் விவேகமும் புதுமையும் கலந்திருந்தால் வெற்றி வாகையை சூடியிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com