”விஷால் சார் நேர்மையானவர்”- ’வீரமே வாகை சூடும்’ இயக்குநர் து.ப சரவணன் சிறப்புப் பேட்டி

”விஷால் சார் நேர்மையானவர்”- ’வீரமே வாகை சூடும்’ இயக்குநர் து.ப சரவணன் சிறப்புப் பேட்டி
”விஷால் சார் நேர்மையானவர்”- ’வீரமே வாகை சூடும்’ இயக்குநர் து.ப சரவணன் சிறப்புப் பேட்டி
Published on
‘வீரமே வாகை சூடும்’ கற்பனை கதைதான். ஆனால், உண்மைக்கு நெருக்கமான கதை. இப்படியெல்லாம்கூட வாழ்க்கையில் நடக்குமா என்று யோசித்தால், கண்டிப்பாக நம் சமூகத்தில் நடக்கும் என்றுதான் சொல்வேன்” படத்தின் ட்ரெய்லரைப் போலவே அதிரடியாக பேசுகிறார், இயக்குநர் து.ப சரவணன். விஷால் நடிப்பில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ அடி-உதை காட்சிகளால் மட்டுமல்ல, “ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறதைவிட, அதை எந்த கண்ணோட்டத்தோட பார்க்குறோம்ங்குறதுதான் ஒரு நல்ல போலீஸ்காரனோட முக்கியமான தகுதி”... ”எலிய துரத்துற பாம்பு ஆபத்தானதா? பாம்பு துரத்துற எலி ஆபத்தானதா? பாம்போட பசி ஒரே ஒரு எலி, எலியோட பசி ஒட்டுமொத்த வயல்” என ட்ரெய்லரிலேயே ’டெர்ரர்’ வசனங்களால் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார் து.ப சரவணன். வெற்றி வாகை சூட இருக்கும் நிலையில், இயக்குநர் து.ப. சரவணனிடம் பேசினேன்.
'வீரமே வாகை சூடும்’ ஆக்‌ஷன் படம் என்பதாலேயே இப்படியொரு தலைப்பா?

“கதை சொல்லும்போதே ’இது ஹீரோ கதை இல்லை. சாமானியனின் கதை’ என்றுதான் விஷால் சாரிடம் சொன்னேன். கதையின் அடிநாதமே சாமானியர்களைப் பற்றியது. அதனால், முதலில் படத்திற்கு ‘சாமானியன்’ என்றே பெயர் வைத்தோம். ஆனால், அந்தத் தலைப்பை வேறொருவர் பதிவு செய்திருந்ததால், வைக்க முடியாமல் போனது. இப்படி எந்தத் தலைப்பை வைத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தது. பாதி படப்பிடிப்பு முடிந்து ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கு முன்புவரை தலைப்பை முடிவாகவில்லை. நீதியின் பக்கம் நின்று யார் வெற்றி பெற்றாலும் உண்மை ஜெயிக்கும் என்போம் இல்லையா?. அப்படி, யோசிக்கும்போதுதான் ‘வீரமே வாகை சூடும்’தலைப்பு கடைசியில் மாட்டியது. எந்தத் தலைப்பும் கிடைக்காமல் போய்தான் இது கிடைத்தது. ஆனால், விஷால் சாருக்கும் ரொம்பப் பிடித்து விட்டது. ஒரு படத்தின் வெற்றியை தலைப்பே 20 சதவீதம் உறுதி செய்துவிடும். அப்படியான தலைப்பு இது”.

பொதுவாவே விஷால் ஆக்‌ஷன் படத்துலதான் நடிப்பார். இது ஆக்‌ஷன் படமா இருந்தாலும் டிரெய்லரே வித்தியாசமா இருக்கே?

”நான் லீனியர் படமாகத்தான் ‘வீரமே வாகை சூடும்’ படத்தினை எடுத்துள்ளேன். விஷால் சாருக்கு திரைக்கதை ரொம்பவே பிடித்திருந்தது. தொடர்பற்ற மூன்று கதைகள் ஒரு இடத்தில் ஒன்றாக ஒரு சிக்கலில் இணைகிறது. அந்த சிக்கலை உடைத்து ஹீரோ எப்படி வெளியில் வருகிறார் என்பதுதான் கதை. நம் வாழ்வியல் முறை சின்னது. நமக்குள் இருக்கும் உறவுமுறைகள், காதல், அரசியல், வன்முறை இதைத்தாண்டிச் செல்ல முடியாத சூழல் எப்போதும் உள்ளது. தங்களுடன் ஒன்றுகிற மாதிரி கதையாக இருந்தால்தான் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிக்கொள்கிறார்கள். இந்தப் படத்திலும் கமர்ஷியல் இருக்கும். ஆனால், இது எளிய மனிதர்களின் கதை. ஆக்‌ஷன் கதையாக இருந்தாலும் கதைக்கு சம்பந்தப்பட்டுத்தான் இருக்கும்”.


குறிப்பாக, வசனங்கள் கவனம் ஈர்த்திருக்கிறதே?

”வசனங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். நம் வாழ்வின் நிஜத்திலிருந்து எடுத்தது. ஸ்கிரிப்ட் முழுக்க எழுதிவிட்டு வசனங்களுடன்தான் விஷால் சாரிடம் கதையே சொன்னேன். இதுதான் ஒன்லைன் என்று கதை சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு சினிமாவுக்கு மிகப்பெரிய உந்து சக்தி வசனங்கள்தான். அதுதான் ரசிகர்களையும் ஈர்க்கும். நான் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களின் மீது பற்றுள்ள ஆள். உதாரணமா, மணிரத்னம் சாரின் ’தளபதி’ உள்ளிட்ட, அவரின் எல்லா படங்களும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். என் அடுத்தப் படங்களுக்கும் அப்படித்தான் எழுதுவேன். ”ஒரு குற்றவாளி எங்கருந்து உருவாகிறான்? நம்மை காப்பாத்துறதுக்கு ஒருத்தன் இருக்கான் என்று நினைக்கும்போதுதான்’ அந்த வசனத்திலிருந்துதான் கதையே எழுத ஆரம்பித்தேன். கடைசியில் பொன் பார்த்திபன் வசனதுக்கு கரெக்‌ஷன் பண்ணுறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணார்”

படம் முழுக்க சிகப்பு பின்னணி வருகிறதே? இதன்,பின்னணி என்ன?

“படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே, ‘எனக்கு தயவு செஞ்சி கலர்ஃபுல்லா கொடுத்துடாதீங்க. படத்தோட நிறம் ரசிகர்களுடன் கனெக்ட் பண்ணனும். ஒரு ராவான படமா ஆடியன்ஸுக்கு ஃபீல் ஆகணும். படத்தின் வண்ணத்துக்கும் கதைக்கும் ரசிகர்களின் மனநிலைக்கும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஒளிப்பதிவாளரிடம் முன்னரே சொல்லிவிட்டேன். ’வீரமே வாகை சூடும்’ ஒரு கோபம் நிறைந்த படம். அதனால், சிகப்பு நிறத்தைக் கொண்டுவந்தோம்”.

சில காட்சிகளில் விஷால் வெய்ட் போட்டமாதிரி தனித்து தெரிகிறாரே?

“உண்மைதான். ஆனால், அதுக்குக் காரணம், விஷால் சார் இல்லை. கொரோனா ஊரடங்குதான். நடிகர்களின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. இந்த நாளிலிருந்து, இந்தநாள் வரை ஒரு படத்தை முடிக்கவேண்டும் என்று திட்டத்துடன் உடம்பைக் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஆனால், கொரோனாவால் எங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதற்குள், விஷால் சார் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்த ’லத்தி’ படத்திற்கு தேதிகள் ஒதுக்கியிருந்ததால், அதில் நடிக்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. அந்தப் படப்பிடிப்பு சூழலுக்கும் கதைக்காகவும் உடம்பு கொஞ்சம் ஏற்றியிருந்தார். அந்தப் படத்திற்கு அவர் ஒதுக்கியிருந்த தேதிகளை வீணாக்க விரும்பவில்லை. அப்படி வீணாக்கினால் பலரும் பாதிக்கப்படுவார்கள். அதனால், அந்தப் படத்தில் நடித்துவிட்டு ’வீரமே வாகை சூடும்’ பாடல் காட்சிக்கு வந்து வந்து நடித்துக்கொடுத்தார். இப்படி கால சூழலில் நடந்த விஷயம் அது. அதில்தான், சின்ன சேஞ்ச் ஓவர்”.


விஷாலுடன் பணியாற்றிய அனுபவம்?

”விஷால் சாரோட எனர்ஜி ரொம்பப் பிடிக்கும். முதல்நாளே சண்டைக்காட்சிதான் ஷூட்டிங் பண்ணோம். ஃபைட்டிங் என்றால் ரிகர்சல் எல்லாம் பார்க்கமாட்டார். வந்து கைத்கட்டி நிற்பார் முடிச்சிட்டு போய்ட்டே இருப்பார். அவ்ளோ எனர்ஜி. ரொம்ப நேர்மையானவர். உண்மையாக இருப்பார். எல்லோருக்கும் உதவுவார். மனிதர்கள் என்றில்லை வாயில்லா ஜீவன்கள் மீதும் அன்பு கொண்டவர். கேரவனில் இருக்கும்போது நாய்யை பார்த்தால் உடனடியாக கேரவனிலிருந்து இறங்கி உணவு கொடுப்பார். இந்தக் கதையை எழுதும்போதே அழுதுகொண்டே எழுதினேன். படத்துல முக்கியமான எமோஷனல் காட்சி ஒன்று உள்ளது. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சி அது. எழுதும்போதே எனக்கு அழுகை வந்துடுச்சி. சார்கிட்ட சொல்லும்போதே அவரும் அழுதார். இந்தக் கதைக்கு, அவர் ஓகே சொல்ல அந்தக் காட்சிதான் பெரிய காரணம். நடிக்கும்போதும் உண்மையாக அழுதே நடித்தார். அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த யூனிட்டுமே, அந்தக் காட்சிக்கு அழுதது. நடித்தப்பிறகு ’மூன்று நாள் அந்தக் காட்சியில் இருந்து என்னால் வெளியில் வரமுடியவில்லை’ என்று, அவர் சொன்னது எனக்குப் பெருமையான தருணம்”.

யுவன் இசை குறித்து?

“நான் யுவனின் வெறித்தனமான ஃபேன். அவரின் ’ராம்’, ’கற்றது தமிழ்’ எல்லாம் மனதுக்கு நெருக்கமானவை. தமிழ் சினிமா கடந்துவிட முடியாதவை. யுவன் சாருக்கும் விஷால் சாருக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். விஷால் சார் யுவனை செண்டிமெண்ட்டும் பார்க்கிறார். ’இந்தக் கதைக்கு யுவன் பண்ணாதான் செம்மயா வரும்’ என்றுக்கூறி அனுப்பிவிட்டார் விஷால் சார். யுவன் நாங்க நினைச்சதைவிட பலமடங்கு கொண்டுப்போய்ட்டார். திரையில் பார்த்து பிரமிப்பீர்கள்”.

படத்தில் சே குவேரா பின்னணியில் விஷால் வருகிறாரே?

“சேகுவேராவை பிடிக்காமால் யாராவது இருப்பார்களா? அடக்குமுறை இல்லாத இடத்தில் புரட்சி வெடிக்கவேண்டிய அவசியம் கிடையாது. அடக்குமுறை எங்கு உள்ளதோ அங்கிருந்து ஒருவன் வெகுண்டெழுவான். அதுதான் நிஜம். அதனால், எனக்கு சேகுவேரா பின்னணி தேவைப்பட்டது. ’இங்கு வாழ்ந்தால் புத்தனுக்கே கோவம் வரும். நான் சாதாரண ஒரு மனுஷன். கோவப்படலைன்னா நம்மையும் கொன்னுடுவாங்க’ என்ற வசனமும் உள்ளது. இதற்கு காரணம், சேகுவேராதான். எல்லா புரட்சியாளர்களும் எளிய மனிதர்கள்தான். எல்லா புரட்சிகளும் எளியவர்களுக்காக உருவானது”.
(இயக்குநர் து.ப சரவணன்)

உங்களைப் பற்றி?

”என்னோட சொந்த ஊர் விருதாச்சலம். அப்பா பன்னீர் செல்வம் தீவிர திராவிட, மார்க்சிய கொள்கையாளர். முற்போக்காளர். நேர்மை, உண்மை என்று உழைக்கக்கூடியவர். என்னையும் அப்படியே வளர்த்துவிட்டார். மிசாவில் கைதான ரொட்டிக்கடை ராசுவுக்கு அப்பா நெருக்கமானவர். என்னுடைய வசனங்கள் அப்பாவிடம் இருந்துக்கூட வந்திருக்கலாம். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்துவிட்டு சினிமா ஆர்வத்தில் சென்னை வந்துவிட்டேன். சினிமா மேல, படிப்பை விட காதல் வந்ததுக்கு ‘தளபதி’ படமே காரணம். அதோட, ’உலக சினிமா’ தொடர் எழுதிய செழியனின் எழுத்துக்களும் சினிமா மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. ‘குள்ளநரிக்கூட்டம்’ இயக்குநர் ஸ்ரீ பாலாஜி, ‘தகறாறு’, ‘வீரசிவாஜி’ இயக்குநர் கணேஷ் விநாயக்கிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன். அதன்பின்னர்,‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தினை இயக்கினேன். பலருக்கும் அந்தக் குறும்படம் பிடித்தது. அதில் ,விஷால் சாரும் ஒருவர். அதனைப் பார்த்துவிட்டுதான் வாய்ப்பு கொடுத்தார். விஷால் சார் பெரிய ஹீரோ. அவருக்கு படம் பண்ணுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கதையை சொன்னவுடனே எல்லா வேலையும் தொடங்கிடுச்சி. இப்போ ரிலீஸ்ல வந்து நிக்குது”.

காவல்துறை வசனங்களாக உள்ளதே? உங்களுக்குப் பிடித்த காவல்துறை அதிகாரி யார்?

“எனக்கு சைலேந்திர பாபு சார் ரொம்பப் பிடிக்கும். அவரின் மிகப்பெரிய ஃபாலோயர் நான். காவல்துறையை மட்டும் ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களையும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி, உணவு முறை என்றும் சொல்லிப் பதிவிடுவார். அவர் மாதிரி பலப்பேரைப் பிடிக்கும்”.

’தேவி 2’, ‘அத்ரங்கி ரே’ டிம்பிள் ஹயாதியை எப்படி கொண்டு வந்தீர்கள்?

”ஒரு ஹீரோயின் மெட்டிரியல்ல நாங்கள் அவரை தேர்வு செய்யவில்லை. நல்லா வெள்ளையா மார்டன் ட்ரெஸ் போட்டு இருக்கவேண்டும் என்றும் விரும்பவில்லை. இந்தக் கதை எளியவர்களுடன் கனெக்ட் ஆகணும் என்று யோசித்தே முடிவு செய்தோம்”.


உங்களுக்குப் பிடித்த இயக்குநர்கள்?

”ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒவ்வொருவரைப் பிடிக்கும். சினிமாவுக்கு வரும்போது மணிரத்னம் சார் பெரிய இன்ஸ்பிரேஷன். அதன்பிறகு, தேடுதல், பார்வைகள் அதிகமாகுமில்லையா? எனக்கு வெற்றிமாறன் சார் பிடிக்கும். அவர் சினிமாக்கள் பெரிய பலம். நான் பார்த்த சிறந்த திரைக்கதைப் படம் ‘ஆடுகளம்’. அதன்பிறகு, பா.ரஞ்சித் சார் பிடிக்கும். அவருடைய ‘மெட்ராஸ்’ ஒரு இன்ஸ்பிரேஷன். கதை, இசை, ஒளிப்பதிவு என்று எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு செய்த படம். மற்றபடி ராம் சார், பாலுமகேந்திரா சார் எல்லோருடைய படங்களும் பிடிக்கும்.

டிரெய்லரைப் பார்த்தால் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்புணர்வு தொடர்பான கதைபோல் உள்ளதே? பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

“சமூகம் தன்னை மாற்றிகொள்ளக்கூடிய காலக்கட்டத்தில்தான் இருக்கிறது. என்ன சட்டங்கள் உத்தரவுகள் இருந்தாலும் முதலில் தனிமனித ஒழுக்கம் முக்கியம். இதுதான், உடனடியாக சரிசெய்யவேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். அதேசமயம், இது பாலியல் வன்புணர்வு சார்ந்த கதை இல்லை. அதை மையப்படுத்தியும் காட்டவில்லை. ஒரு சிறு விஷயமாக இருக்கும் அவ்வளவுதான்”.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com