ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் பால்யகால நினைவுகளில் பூக்களைத் தூவுபவை தியேட்டர்கள். அப்படியான இனிய அனுபவங்களை த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துள்ளார்.
"நான் விருதுநகரில் வளர்ந்தேன். அங்கிருந்த நியூ முத்து தியேட்டர், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்தது. தியேட்டரில் இருந்து வரும் சத்தம் அரை கிலோ மீட்டர் தூரத்திற்குக் கேட்கும். வீட்டில் உட்கார்ந்துகொண்டே தியேட்டரில் ஓடும் படத்தில் எந்தக் காட்சி, பாடல் அல்லது வசனம் என்னவென்று சொல்லிவிடுவேன். பத்து வயதாக இருக்கும்போது, நான் முதன்முதலாகப் பார்த்த ரஜினியின் பில்லா படம் நினைவில் இருக்கிறது.
அந்தப் படத்தை என் அம்மாவுடன் லேடிஸ் டிக்கெட்டில் பார்த்தேன். டிக்கெட் விலை 25 பைசா அல்லது 30 பைசாவாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் இரவு ஏழு மணிக்கு ஸ்கூல் ஹோம்வொர்க் முடிந்ததும் பெண்கள் கவுண்டருக்கு அருகில் போய் நின்றுவிடுவேன். 'பில்லா' படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில்லை. 'மை நேம் இஸ் பில்லா பில்லா' பாடலைப் பாடிக்கொண்டே கைகளால் தலைமூடியை ஸ்டைலாக தூக்கிவிடுவேன்.
பில்லா
அப்போது என் கனவு தேவதையாக ஸ்ரீப்ரியா இருந்தார். அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக அது இருந்தது. பாலும் பழமும், 'சகலகலா வல்லவன்' படங்களைப் பார்த்த ஞாபகங்களும் இருக்கின்றன. உணர்ச்சிகரமான படங்களை மக்கள் எப்படி ரசித்தார்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றி இருக்கின்றன.
கரகாட்டக்காரன்
இன்றைய ஓடிடி தளங்களைப் பொருட்படுத்தாமல் தியேட்டர்கள் வாழும். மனித இனம் ஒன்றாக அமர்ந்து உற்சாகமாக இருப்பதற்கான இடமாக தியேட்டர்கள் உள்ளன. 'கரகாட்டக்காரன் போன்ற ஒரு படத்தை மக்கள் கூட்டத்துடன் அமர்ந்து பார்த்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணும்' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்ததை மறக்கமுடியாது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.