துணிவு vs வாரிசு: பொங்கல் விடுமுறை முடிந்ததும் குறைந்த வசூல்! எந்த படத்துக்கு கடும் சரிவு?
பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவிக்கும் வகையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் முன்னதாகவே ஒரே நாளில் வெளியானது அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’. தற்போது அந்த விடுமுறை முடிந்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் இரண்டுப் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ளது. இனிதான் படத்தின் உண்மையான நிலவரம் தெரியவரும். இதுகுறித்து இங்குப் பார்க்கலாம்.
வாரிசு
விஜய் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உருவான ‘வாரிசு’ திரைப்படம், கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு (பில்டப்) எல்லாம் கொடுக்கப்பட்ட நிலையில், படம் திரையரங்கில் வெளியானதும், இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தது. எனினும், வழக்கம்போல் விமர்சனங்களை தாண்டி படத்தின் வசூலும் அதிகரித்தே காணப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தப் படம், உலகம் முழுவதும் 239.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
பேமிலி சென்டிமென்ட் நிறைந்தப் படம் என்பதால், பொங்கல் விடுமுறையில் நல்ல வசூலை ஈட்டிய இந்தப் படம், அதன்பிறகு வார நாட்களில் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனையெல்லாம் முறியடித்து திரையரங்கில் ஓரளவு கூட்டம் நிறைந்தே காணப்பட்டது. இதற்கிடையில் இன்றும், நாளையும் மீண்டும் வார விடுமுறை தினம் என்பதால், இதன் வசூல் ரூ. 250 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு
அஜித், மஞ்சுவாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி எனக் குறிப்பிட்ட நடிகர்களை மட்டும் வைத்து உருவானப் படம்தான் ‘துணிவு’. எனினும், ஆக்ஷன், வங்கிகளில் நடக்கும் மோசடி, ‘மங்காத்தா’ படம் போன்ற நெகட்டிவ் ரோலில் அஜித்தை புத்துணர்ச்சியாக காண்பித்தது என இந்தப் படத்திற்கு நிறைய விஷயங்கள் ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்தது என்றே கூறலாம்.
அதனாலேயே ‘வாரிசு’ படத்தைவிட, இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தது. இதனாலேயே இந்தப் படம் 166.85 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
எனினும், ‘வாரிசு’ படத்தைவிட ‘துணிவு’ படம் பொங்கல் விடுமுறை முடிந்து வார நாட்களில் வசூல் சற்று குறைந்தே காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் ஒருவகையான ஆடியன்ஸுக்கு மட்டுமே புரியும் என்பதால், இந்தப் படம் அந்த ஆடியன்ஸை மட்டுமே பூர்த்தி செய்ததாலேயே இந்த பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இரண்டு படங்களுமே, தலா 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளன. தமிழ்நாட்டில் ‘வாரிசு’ படம் 99.7 கோடி ரூபாயும், ‘துணிவு’ படம் 94.65 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று அல்லது நாளைக்குள் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை இரண்டு படங்களுமே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், தமிழ் திரையுலகிற்கு 2023-ம் ஆண்டு துவக்கமே கொண்டாட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.